மித்ரா கல்வி நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை– குற்றச்சாட்டுகளை மறுத்தது மித்ரா

புத்ராஜெயா, நவ. 27 –
மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா-வின் கல்வி ஒதுக்கீடு, தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானம், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகக் கல்வி அமைச்சிடம் வழங்கப்படுவதாக ம.இ.கா. தலைவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மித்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், மித்ரா-வுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் உண்மையான நோக்கம் மற்றும் பயன்பாட்டுத் திட்டங்களைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் மித்ரா தெரிவித்துள்ளது.

மித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் நிதி ஒதுக்கீடு என்பது பள்ளிகளின் கட்டுமானம் அல்லது உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி அல்ல என்றும், மாறாக இந்தியச் சமூகத்தினருக்குப் நேரடியாகப் பயனளிக்கும் கல்வித் திட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் கல்வி இடையீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

இந்தியச் சமூகத்தின் மனிதவள மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, குறிப்பாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், தேசிய கல்வி அறக்கட்டளை (YDN) மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து மித்ரா பல்வேறு கல்வித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியமான எட்டு கல்வித் திட்டங்கள் வருமாறு:

  1. செலிக் மடானி திட்டம்: 3,853 குழந்தைகள் பங்கேற்கும் இளம்பருவக் கல்வி மேம்பாட்டுத் திட்டம்.
  2. கல்வி மடானி திட்டம்: 10,395 குழந்தைகளுக்குப் பயனளிக்கும் வகையில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலாய் மொழி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு பாடங்களில் கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், மதிய உணவு வசதியும் வழங்கப்படுகிறது.
  3. பள்ளி தளவாட உதவி: 361 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு (SBK) 14 வகையான பள்ளி தளவாடப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
  4. திறன்மிகு மின்னனுப் பலகை உதவி: 388 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 திறன்மிகு மின்னணுப் பலகைகள் வழங்கப்பட்டுள்ளன.
  5. தமிழ்மொழி சிறப்புக் கருத்தரங்கு: எஸ்.பி.எம். – எஸ்.டி.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களுக்காகச் சிறப்புத் தமிழ்மொழிக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
  6. மடானி கூடுதல் வகுப்புகள்: எஸ்.பி.எம். – எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்காகச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
  7. பெராந்தி மடானி மடிக்கணினி உதவி: 5,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
  8. சிஸ்வா மடானி சிறப்பு உதவி: முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் 5,000 பேருக்கு தலா 2,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மித்ரா-வின் கல்வி ஒதுக்கீட்டைத் தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியாகச் சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்குச் சமம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மித்ரா-வின் திட்டங்களுக்கான வரம்பு, செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் உண்மையான பதிவுகளை ஆராயாமல் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பொறுப்பற்ற செயலாகும் என்றும், இத்தகைய கருத்துகள் பொதுமக்களைக் குழப்புவதுடன், நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான அரசாங்கத்தின் முயற்சிகளையும் பாதிக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, ம.இ.கா. தலைவர்கள் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மித்ரா மீண்டும் வன்மையாக மறுத்துள்ளதுடன், இத்தகைய பொறுப்பற்ற கருத்துகளைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

மித்ரா தொடர்பான எந்தவொரு விமர்சனமும் உண்மைகள், ஆதாரங்கள் மற்றும் திட்டங்களின் செயல்பாட்டு வரம்புகள் குறித்த சரியான புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், ஊகங்கள் அல்லது தவறான விளக்கங்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles