
பெட்டாலிங் ஜெயா, நவ 26-
ஜொகூர் மாநிலத்தின் பெங்கெராங் பகுதியில் எண்ணெய் சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்துவதுடன், நாட்டிற்குப் பரந்த பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் வட்டார எரிசக்தி மற்றும் கடல்சார் மையமாக அப்பகுதியை மேம்படுத்த வேண்டும் என்று கடல்சார் துறையின் அனுபவமிக்கவரான டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் வலியுறுத்தினார்.
பாதுகாப்பான எண்ணெய் சேமிப்பிற்கான தேவை அதிகரித்து வருவது, அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வட்டார எரிசக்திச் சந்தையில் மலேசியாவின் நிலையை வலுப்படுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்று Maritime Network Sdn Bhd நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அவர் தெரிவித்தார்.
கடல்சார் துறையில் 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஜெயந்திரன், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகள் ஏற்படக்கூடிய சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு எண்ணெய் உற்பத்தி நாடுகள் முக்கியச் சந்தைகளுக்கு அருகிலுள்ள ஆசியப் பகுதிகளில் கச்சா எண்ணெயைச் சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறினார்.
“டயலாக் நிறுவனம் இன்னும் எத்தனை எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளைக் கட்ட முடியும் என்பது மட்டுமே முக்கியக் கேள்வியல்ல. வட்டார எரிசக்திப் பாதுகாப்பிற்கான முக்கியச் சொத்தாகப் பெங்கெராங்கை மலேசியா எவ்வாறு மாற்றப் போகிறது என்பதே முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆழ்கடல் துறைமுகம், முக்கிய அனைத்துலகக் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அருகிலுள்ள அமைவிடம், மிகப்பெரிய எண்ணெய்க் கப்பல்களைக் கையாளும் வசதி ஆகியவை பெங்கெராங்கின் பலங்களாக உள்ளன.
டயலாக் குழுமம் மற்றும் பெட்ரோனாஸ் நிறுவனங்களின் முக்கிய வசதிகளுடன், அப்பகுதி எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோலிய வேதியியல் தொழில்களின் முக்கிய மையமாக வளர்ந்துள்ளது.
மேலும் 20 லட்சம் கனமீட்டர் எண்ணெய் சேமிப்புக் கொள்ளளவை உருவாக்குவதற்குத் தேவையான நிலம் தங்களிடம் இருப்பதாக டயலாக் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் இங் பூன் கியாட் அண்மையில் தெரிவித்திருந்தார். இது சுமார் 1 கோடியே 20 லட்சம் முதல் 1 கோடியே 30 லட்சம் பீப்பாய்களுக்கு இணையானதாகும்.
இந்த ஆர்வத்தை மலேசியா பயன்படுத்திக்கொண்டு, எண்ணெய் சேமிப்பு, கப்பல் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து மற்றும் இதர கடல்சார் சேவைகளை உள்ளடக்கிய விரிவான வர்த்தக, தொழில்துறை மையமாகப் பெங்கெராங்கை உருவாக்க வேண்டும் என்று ஜெயந்திரன் வலியுறுத்தினார்.

