
பத்து, நவ. 25-
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL) 2027ஆம் ஆண்டுக்கான RM3.30 பில்லியன் நிதிநிலை அறிக்கை, மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.15 விழுக்காடு அதிகரிப்பைக் கண்டுள்ள இந்நிதிநிலை அறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச தகனச் சேவை வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்க முக்கிய அம்சமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைக் குறைக்கும் இத்திட்டம், துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்குப் பெரும் உதவியாக அமையும். குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இது குறிப்பிடத்தக்க நிவாரணமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பொதுவீடுகள் மற்றும் மக்கள் வீட்டுத் திட்டங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக RM254.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுவசதித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மொத்தம் 2,817 வீடுகளைக் கொண்ட நான்கு ருமா மஜ்லிஸ் திட்டங்கள் மாதம் RM1,000 வாடகையில் செயல்படுத்தப்படவுள்ளன.
குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்த RM7 மில்லியனும், மூத்த குடிமக்களுக்கான இரண்டு பகல்நேர பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் RM4.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், MYSchoolBus@Wilayah திட்டத்தின் கீழ், குறைந்த விலை வீடமைப்புப் பகுதிகளைச் சேர்ந்த 6,028 மாணவர்கள் பயன்பெறும் வகையில் RM7.28 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், சாலைப் பராமரிப்பு, வெள்ளத் தடுப்பு மற்றும் நிலச்சரிவு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு RM292.5 மில்லியனும், வெள்ளப் பிரச்சினைகளைக் கையாள நீர்நிலைகள் மற்றும் ஆறுகளைப் பராமரிக்க RM46.4 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 22 கிலோமீட்டர் நீளத்திற்கு நடைபாதைகள் அமைக்க RM55 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, ஆரோக்கியமான நகர்ப்புற வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிதிநிலை அறிக்கை வெறும் நிதி ஒதுக்கீடுகளின் தொகுப்பாக இல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநகரத்தை உருவாக்குவதற்கான தொலைநோக்குத் திட்டமாக அமைந்துள்ளது.
இத்திட்டங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடனும் விரைவாகவும் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த நிதிநிலை அறிக்கையை முன்னெடுத்த பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனா யோ மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

