AKPS பெண் அதிகாரியின் துணிச்சல், MADANI அரசாங்கத்தின் சீர்திருத்த இலட்சியத்திற்கு வலுச்சேர்க்கிறது

கோலாலம்பூர் நவ 25-
நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது முதல், மாண்புமிகு பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் எந்தச் சூழ்நிலையிலும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்ற தெளிவான செய்தியைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஒருவரின் பதவி, அந்தஸ்து அல்லது செல்வாக்கு எதுவாக இருந்தாலும், தவறிழைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் என்று சண்முகம் மூக்கன்
(மாண்புமிகு பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி) இன்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த உறுதியான நிலைப்பாடு, தவறிழைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் மட்டுமல்லாமல், நேர்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டத் துணிந்து செயல்படும் அரசுப் பணியாளர்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

கடந்த 11 ஜூன் 2024 அன்று, நிதி அமைச்சின் பணியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றியபோது, பிரதமர் வெளிப்படையாகப் பின்வரும் உத்தரவாதத்தை வழங்கினார்:

“தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்யும் ஒவ்வொரு அரசுப் பணியாளரையும் நான் பாதுகாப்பேன்.”

இந்த நிலைப்பாடு, தங்களது கண்காணிப்பின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளைப் புகாரளிக்கத் தவறும் துறைத் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, 5 ஜூலை 2024 அன்று அரசுப் பணியாளர் துறை (JPA) வெளியிட்ட சுற்றறிக்கையின் மூலமும் வலுப்படுத்தப்பட்டது.

இந்தப் பின்னணியில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) முனையம் 2-இல் பணியாற்றும் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையைச் (AKPS) சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் அதிகாரி ஒருவர், தனது மேலதிகாரியின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து 17 நவம்பர் 2026 அன்று காவல்துறையில் புகார் அளிக்க முன்வந்த துணிச்சல் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

குறிப்பாக, தனக்குக் கீழ் பணியாற்றும் ஓர் அதிகாரி, தனது மேலதிகாரிக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுப்பதும், நடவடிக்கை எடுப்பதும் எளிதான காரியமல்ல. அவ்வாறு செயல்படும் போது தனது எதிர்காலப் பணியும் பதவியும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இயல்பானதே.

ஒரு நிர்வாகத்தின் மாற்றம் என்பது தலைமைத்துவ மாற்றத்தால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. மாறாக, பணியிடக் கலாசாரம் மற்றும் தங்களைப் பாதுகாக்கும் நிர்வாக அமைப்பின் மீதான அரசுப் பணியாளர்களின் நம்பிக்கையில் ஏற்படும் மாற்றத்தினாலும் அது அளவிடப்படுகிறது.

தங்களது பதவி மற்றும் எதிர்காலப் பணியைப் பற்றிய அச்சத்தினால் தவறுகளைக் கண்டும் காணாமல் மௌனமாக இருக்கும் கலாசாரத்திலிருந்து விடுபட்டு, நேர்மையின் அடிப்படையில் துணிந்து குரல் கொடுக்கவும் செயல்படவும் நம்பிக்கையளிக்கும் புதிய பணிக் கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

அந்த வகையில், AKPS தலைமை இயக்குநர் டத்தோ’ ஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் அவர்கள் வழங்கியுள்ள பாதுகாப்பு உத்தரவாதம் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

அவரது இந்த நடவடிக்கை, மாண்புமிகு பிரதமர் வலியுறுத்தி வரும் அரசுப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கொள்கைக்கு நடைமுறை வடிவம் கொடுத்துள்ளது.

இந்தியச் சமூகத்தின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பெண் அதிகாரியின் துணிச்சல் எனக்குத் தனிப்பட்ட பெருமையை அளிக்கிறது. அவரது முன்மாதிரியான செயல் இன, மத எல்லைகளைக் கடந்த ஒன்றாகும். இது ஒட்டுமொத்த மலேசிய மக்களும் பெருமைப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.

இந்த முன்னேற்றம், MADANI அரசாங்கத்தின் நிறுவன சீர்திருத்த இலட்சியங்கள் தலைமைத்துவத்தின் உறுதிமொழிகளுடன் நின்றுவிடாமல், அமலாக்கத் துறைகளின் செயல்பாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதைக் காட்டுகிறது. பிரதமர் வலியுறுத்தி வரும் நேர்மையான பணிக் கலாசாரத்தையும் அரசுப் பணியாளர்களுக்கான பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

பதவி என்பது தவறுகளை மறைப்பதற்கான கேடயம் அல்ல. அதிகாரம் என்பது சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவதற்கான உரிமமும் அல்ல. உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் துணிந்து குரல் கொடுப்பவர்கள் தங்களது தொழில் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் இழக்க வேண்டிய நிலை ஒருபோதும் ஏற்படக்கூடாது.

சம்பந்தப்பட்ட பெண் அதிகாரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது துணிச்சல், மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக நேர்மையுடனும் அச்சமின்றியும் தங்களது கடமைகளை நிறைவேற்றும் அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் ஓர் உந்துசக்தியாக அமையட்டும் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles