பத்துகாஜா சுற்றுவட்டாரங்களில் கடுமையான துர்நாற்றம் – காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது! 

பத்துகாஜா, நவ24-

பத்துகாஜா அதன் சுற்றுவட்டாரங்களான லஹாட்,பூசிங்,பத்துகாஜா பெர்டானா,மெங்கிலம்பு,பாப்பான் உட்பட பல பகுதிகளில் தொடர்ந்து வெளிப்படும் துர்நாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறியுமான நாடாளூமன்றத்தில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான விசாரணைத் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்நிலையில் அமைச்சின் ஆணைக்கிணங்க எழுத்துப்பூர்வ பதிலில், பேரா மாநில சுற்றுச்சூழல் துறையின் (DOE) புகார்கள் மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில், தொழிற்சாலை நடவடிக்கைகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் திறந்தவெளி எரிப்பு ஆகியவை இந்தத் துர்நாற்றத் தொல்லைக்கான சாத்தியமான காரணங்களில் அடங்கும் என்று அமைச்சு தெரிவித்தது.

அதற்கான சரியான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அத்துறை தெரிவித்ததாக மாண்புமிகு சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், பேராக் சுற்றுச்சூழல் துறை, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பணியில் ஈடுபடும் ஒரு சிறப்பு ரோந்துக் குழுவை அமைத்துள்ளது.

ஈப்போ நகர மன்றமும் அவ்வப்போது ரோந்துப் பணிகளை மேற்கொள்கிறது. சம்பந்தப்பட்ட முகமைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தொடர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்தப் பிரச்சினை இப்போது கிந்தா மாவட்ட வளர்ச்சி நடவடிக்கைக் குழு கூட்டத்தின் ஒரு நிரந்தர நிகழ்ச்சி நிரலாக உள்ளது என்ற தகவலையும் சிவகுமார் பகிர்ந்து கொண்டார் அதுமட்டுமின்றி, 2026 ஆம் ஆண்டு முழுவதும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட வரையில், சுற்றுச்சூழல் துறை (DOE) கிந்தா மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலை நடவடிக்கைகளில் 193 தொடர் ஆய்வுகளை நடத்தியுள்ளதுடன், 64 வழிகாட்டுதல் அறிவிப்புகளையும் 23 அபராதங்களையும் விதித்துள்ளது. இந்த எண்ணிக்கை, மாவட்டம் முழுவதும் தூய்மையான காற்று, தொழிற்சாலைக் கழிவுநீர், சாக்கடை மற்றும் திட்டமிடப்பட்ட கழிவுகள் தொடர்பான பல்வேறு குற்றங்களை உள்ளடக்கியது என்றார். 

ஆய்வுகளை நடத்த வந்த அதிகாரிகளின் முயற்சிகளை தாம் பாராட்டுவதாக கூறிய அவர் இருப்பினும், குடியிருப்பாளர்களுக்கு, இந்த துர்நாற்றம் ஏன் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வருகிறது மற்றும் இந்தப் பிரச்சினை எப்போது தீர்க்கப்படும் என்பதே முக்கியக் கேள்வியாக உள்ளது. துர்நாற்றம் அடிக்கடி பதிவாகும் இடங்களிலும் நேரங்களிலும் ரோந்துப் பணிகளைக் குவிக்குமாறும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்குமாறும் சுற்றுச்சூழல் துறையையும் (DOE) உள்ளூர் அதிகாரிகளையும் தாம் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

புகார் அளிக்கும்போது, ​​துர்நாற்றத் தொல்லை ஏற்பட்ட இடம், தேதி, நேரம் மற்றும் கால அளவைக் குறித்துக்கொள்ளுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டு கொண்ட அவர் இந்தத் தகவல், காரணத்தைக் கண்டறிய அதிகாரிகளுக்கு பெரும் உதவியாக இருக்குமென்றார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரை, விசாரணையின் முன்னேற்றத்தை தாம் தொடர்ந்து கண்காணித்து, குடியிருப்பாளர்களின் குரல்களை வெளிக்கொணர்வேன் என்றும் செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு டாக்டர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles