
கோத்தா கெமுனிங், நவ. 23–
இளம் தலைமுறையினரின் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையான வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம் விளையாட்டுத் துறையில் உயர்ந்த நிலையை அடையச் செய்ய முடியும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் தெரிவித்தார்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற மக்கள் சேவை மையம், MITRAA அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தொகுதி கால்பந்துக் கோப்பைப் போட்டியை முன்னிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த நவம்பர் 21ஆம் தேதி, ஷா ஆலம் செக்ஷன் 17, ஜே.கே.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் ஏழு தொடக்கப்பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.
“மாணவர்களிடையே ஒழுக்கம், குழு உணர்வு, ஒற்றுமை, விளையாட்டு மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் சிறந்த தளமாக இப்போட்டி அமைந்துள்ளது.
“பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து விளையாடுவதையும், தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதையும் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களின் திறமைகள் வளரத் தேவையான வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் வழங்க வேண்டும்,” என்று பிரகாஸ் சம்புநாதன் குறிப்பிட்டார்.
சுற்றுப்போட்டி முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வோர் அணியும் தலா ஆறு ஆட்டங்களில் பங்கேற்றன. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.கே. செக்ஷன் 27 (1) பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
எஸ்.கே. புக்கிட் கெமுனிங் (2) இரண்டாம் இடத்தையும், எஸ்.கே. தாமான் ஆலாம் மேகா மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
எஸ்.கே. தாமான் ஸ்ரீ மூடா 2 நான்காவது இடத்தையும், எஸ்.கே. கோத்தா கெமுனிங் ஐந்தாவது இடத்தையும், கோலாலம்பூர் சைனீஸ் தைப்பே பள்ளி ஆறாவது இடத்தையும், எஸ்.ஜே.கே. (சி) கே பெங் ஏழாவது இடத்தையும் பெற்றன.

தனிநபர் விருதுகளில், எஸ்.கே. செக்ஷன் 27 (1) பள்ளியைச் சேர்ந்த நிக் முஹம்மது நவ்ஃபார் பின் நிக் முகமது டேன் சிறந்த கோல்காப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதே பள்ளியின் முகமது இஸ்கந்தார் அதிக கோல்கள் அடித்த வீரருக்கான விருதைப் பெற்றார்.
எஸ்.கே. புக்கிட் கெமுனிங் (2) பள்ளியைச் சேர்ந்த கிஷேவ் ராஜ் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த MITRAA அமைப்பு, பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நடுவர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற மக்கள் சேவை மையம் நன்றி தெரிவித்துக் கொண்டது.

