எளிய குடும்பத்தில் பிறந்து முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் பூங்கோதை சந்திரசேகரம்

தஞ்சோங் மாலிம், நவம்பர் 25, 2026 – எளிய குடும்பத்தில் பிறந்து, பல்வேறு வாழ்க்கைச் சவால்களைக் கடந்து, தனது குடும்பத்தின் முதல் முனைவர் பட்டதாரியாக டாக்டர் பூங்கோதை சந்திரசேகரம் சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான தந்தையின் மகளான இவர், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (UPSI), கலை, கணினியியல் மற்றும் படைப்பாக்கத் தொழில்துறை புலத்தில் (FSKIK), கற்பித்தல் ஊடகத் துறையில் (Instructional Media) முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ளார். மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்து, Graduate on Time (GOT) என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

இவரது ஆய்வு, Augmented Reality (AR) எனப்படும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் அறநெறிச் சிந்தனையை வளர்ப்பதை மையமாகக் கொண்டது. இந்த ஆய்வின் மூலம் INAR-MOREMO என்ற புதிய கற்பித்தல் மாதிரியையும் உருவாக்கியுள்ளார்.

கல்வித் தொழில்நுட்பம், கற்பித்தல் ஊடகம், நவீன கற்பித்தல் முறைகள், கல்வி ஆராய்ச்சி, Augmented Reality (AR) மற்றும் அறநெறிக் கல்வி ஆகியவை இவரது நிபுணத்துவத் துறைகளாகும்.

மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் 14 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், 2019ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருதையும் (APC), 2022ஆம் ஆண்டு மலேசிய அரசின் உயர்கல்வி உதவித்தொகையையும் (HLP) பெற்றுள்ளார்.

குடும்பப் பொறுப்புகள், பணிச்சுமை மற்றும் பல்வேறு வாழ்க்கைச் சவால்களுக்கு மத்தியிலும், விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் தனது கல்விப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், அடுத்தகட்டமாகப் பல்கலைக்கழக விரிவுரையாளராகத் தனது கல்விச் சேவையைத் தொடரவுள்ளார். கல்வி ஆராய்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பதே இவரது நோக்கமாகும்.

எளிய குடும்பப் பின்னணி சாதனைக்குத் தடையல்ல என்பதையும், கல்வி, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் உயர்ந்த இலக்குகளை அடைய முடியும் என்பதையும் இவர் நிரூபித்துள்ளார்.

டாக்டர் பூங்கோதையின் இந்தச் சாதனை அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்ப்பதோடு, பெண்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles