
கோலாலம்பூர், நவ.25-
கல்வி என்றாலே தேர்வு, மதிப்பெண், தரவரிசை, தேர்ச்சி விகிதம்… இவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால், பள்ளிக்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும்தான் வகுப்பறைக்குள் நுழைகிறதா? சில குழந்தைகள் தங்களுக்குள் பல குடும்பப் பிரச்சினைகளையும் சமூக வலிகளையும் சுமந்துகொண்டுதான் பள்ளிக்கு வருகின்றன. அந்தக் குழந்தைகளின் குரலை யார் கேட்பது?
இந்தக் கேள்வியை முன்வைத்துள்ள கெஅடிலான் தேசிய மகளிர் பிரிவின் துணைத் தலைவர் லோ கெர் சியான், மாணவர்களின் சமூகப் பிரச்சினைகளைக் கையாள மலேசியப் பள்ளிகளில் தொழில்முறை சமூகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வறுமை, குடும்பப் பிரச்சினைகள், புறக்கணிப்பு, குடும்ப வன்முறை, துன்புறுத்தல், பகடிவதை, பாகுபாடு எனப் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் கல்வியிலும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். சிலர் பள்ளிக்கு வர முடியாமல் தவிக்கின்றனர்; இன்னும் சிலர் கல்வியைப் பாதியிலேயே கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தண்டனை தீர்வாகுமா?
அடிக்கடி பள்ளிக்கு வராத மாணவரை எடுத்துக்கொள்வோம். அவருக்கு எச்சரிக்கை விடுப்பதும், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதும், பெற்றோரை அழைத்துப் பேசுவதும் மட்டுமே தீர்வாகிவிடுமா?
பெற்றோர் வேலைக்குச் செல்லும்போது வீட்டில் தம்பி, தங்கைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அந்த மாணவர் இருக்கலாம். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாகப் பேருந்துக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் இருக்கலாம். சிலருக்கு வீட்டிலேயே துன்புறுத்தல் நடக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் பள்ளி மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கக்கூடும்.
இத்தகைய மாணவர்களைத் தண்டிப்பதற்கு முன்பு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் உண்மையான காரணங்களைக் கண்டறிவதே முக்கியம் என லோ கெர் சியான் சுட்டிக்காட்டியுள்ளார்.
பகடிவதைச் சம்பவங்களிலும் தவறு செய்த மாணவர் மீது நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப்பட்ட மாணவரைப் பாதுகாப்பதும் அவசியம். அதேவேளை, சம்பவத்தின் பின்னணியில் உள்ள குடும்பச் சூழல், சமூக உறவுகள் மற்றும் மீண்டும் அத்தகைய சம்பவம் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய வேண்டும் என்றார்.
பள்ளிகளுக்குள் சமூகப் பணியாளர்கள்!
இதற்கான தீர்வாகவே பள்ளிச் சமூகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார்.
மாணவர்களின் குடும்பச் சூழலை மதிப்பீடு செய்தல், சமூகப் பிரச்சினைகளைக் கண்டறிதல், குடும்பத்தினருடன் தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மாணவர்களின் உரிமைகளுக்காகப் பரிந்து பேசுதல் மற்றும் அரசாங்க உதவிகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளில் இவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
மேலும், மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம், சமூக அமைப்புகளுக்கு இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட முடியும். சமூக நலத்துறை, சுகாதார அமைச்சு, மலேசியக் காவல்துறை உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்க முடியும்.
இவர்களின் நியமனம் ஆசிரியர்கள் அல்லது ஆலோசகர்களின் பொறுப்புகளைப் பறிப்பதற்காக அல்ல. மாறாக, ஆசிரியர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும், ஆலோசகர்கள் மாணவர்களின் உளவியல் மற்றும் உணர்வுசார் பிரச்சினைகளைக் கையாளவும், சமூகப் பணியாளர்கள் குடும்ப மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உதவும் வகையில் மாணவர் ஆதரவு அமைப்பை வலுப்படுத்துவதே நோக்கமாகும்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒருவர்!
முதற்கட்டமாக, மாணவர் எண்ணிக்கை, சமூகப் பிரச்சினைகளின் தீவிரம் மற்றும் கையாள வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிக் குழுமங்களில் சமூகப் பணியாளர்களை நியமிக்கலாம் என்று லோ கெர் சியான் பரிந்துரைத்துள்ளார்.
நீண்டகாலத் திட்டமாக, தேவைக்கேற்ப ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு சமூகப் பணியாளரையாவது நியமிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, சமூகப் பணியாளர்களை நியமிப்பதால் மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. பள்ளி நிர்வாகம், பெற்றோர், சமூக அமைப்புகள், அரசாங்கத் துறைகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, கல்வி முறையின் வெற்றியைத் தேர்வு முடிவுகளைக் கொண்டு மட்டுமே அளவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், துன்புறுத்தலிலிருந்து எத்தனை மாணவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர், கல்வியை இடைநிறுத்தும் நிலையில் இருந்த எத்தனை பேர் மீண்டும் கல்வியைத் தொடர உதவப்பட்டுள்ளனர், வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள எத்தனை பேருக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மதிப்பெண்களில் மட்டுமல்ல, மாணவர்களின் வாழ்க்கையிலும் வெற்றி இருக்க வேண்டும். எந்தவொரு குழந்தையும் குடும்ப அல்லது சமூகப் பிரச்சினைகளால் கல்வியை இழந்துவிடக் கூடாது என்பதே உண்மையான கல்வி முறையின் அடையாளம் என லோ கெர் சியான் வலியுறுத்தியுள்ளார்.

