
கோலாலம்பூர் நவ 24-
இந்தியாவிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கான விசா விலக்கு வசதியை நிறுத்துவதற்கான எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்ற முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது நஸ்ரி அப்துல் அஸீஸின் கருத்தை மலேசிய பிபிபி இளைஞர் பிரிவு ஆதரிக்கிறது.
இந்தியா, மலேசியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகவும், சுற்றுலாப் பயணிகள் வருகையில் முக்கியச் சந்தையாகவும் திகழ்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசதந்திர உறவும் நட்புறவும், பொருளாதாரம், கல்வி, பண்பாடு மற்றும் மக்களுக்கிடையிலான நெருக்கமான தொடர்புகள் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளன.
2025ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு 1,565,194 பயணிகள் வருகைகள் பதிவாகியுள்ளன. இது 2024ஆம் ஆண்டில் பதிவான 1,365,387 வருகைகளுடன் ஒப்பிடுகையில் 14.6 விழுக்காடு அதிகரிப்பாகும். மலேசியச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் போட்டித்திறனுக்கும் இந்தியச் சந்தை எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்தியப் பயணிகளின் வருகை சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதுடன், தங்கும் விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், பேரங்காடிகள் மற்றும் உள்ளூர் வணிகர்களுக்கும் பொருளாதாரப் பயன்களை வழங்குகிறது. எனவே, எந்தவொரு கொள்கை மாற்றத்தையும் பரிசீலிப்பதற்கு முன்பு, அதன் பொருளாதாரத் தாக்கத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனினும், விசா விலக்கு வசதி தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. நுழைவு நிபந்தனைகளை மீறுவோர் அல்லது இந்த வசதியைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது கடுமையான, உரிய அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேவேளையில், ஒரு சிலரின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, சட்டபூர்வமாக வருகை தந்து நமது நாட்டின் சட்டங்களை மதிக்கும் அனைத்துப் பயணிகள் மீதும் ஒட்டுமொத்தத் தடைகளை விதிக்கக் கூடாது.
நுழைவுச் சோதனை நடைமுறைகளை வலுப்படுத்துதல், பயணிகளின் தங்கும் காலத்தைக் கண்காணிப்பதை மேம்படுத்துதல் மற்றும் குடிநுழைவுச் சட்ட மீறல்களில் ஈடுபடும் தனிநபர்கள், முகவர்கள் அல்லது முதலாளிகள் மீது அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் ஆகிய அரசாங்கத்தின் முயற்சிகளை மலேசிய பிபிபி இளைஞர் பிரிவு ஆதரிக்கிறது.
நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நலன்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதேசமயம், நட்பு நாடுகளுடனான நல்லுறவைப் பாதுகாத்து, சமநிலையுடனும் நியாயமாகவும் உண்மைத் தகவல்களின் அடிப்படையிலும் மலேசியாவின் குடிநுழைவு மற்றும் சுற்றுலாக் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
எனவே, இந்தியச் சுற்றுலாச் சந்தையைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு, தரவுகள் மற்றும் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். இதனுடன், சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும்.
மலேசிய பிபிபி இளைஞர் பிரிவின் நிலைப்பாடு தெளிவானது: இந்தியப் பயணிகளுக்கான விசா விலக்கு வசதியைத் தொடர வேண்டும்; கண்காணிப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும்; இந்த வசதியைத் தவறாகப் பயன்படுத்தும் எந்தத் தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு சிலரின் தவறுகளுக்காக அனைத்துப் பயணிகளையும் தண்டிக்கக் கூடாது. மாறாக, தவறு செய்பவர்களை இலக்காகக் கொண்டு பயனுள்ள அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகாலமாகக் கட்டியெழுப்பப்பட்ட நட்புறவு, வர்த்தக உறவு மற்றும் வியூக ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்க வேண்டும்.
சத்தியா சுதாகரன்
மலேசிய பிபிபி தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர்
24 நவம்பர் 2026

