மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா: கிளை அளவில் சிறந்த தலைவர்களை உருவாக்குவது அவசியம்! :-டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்து

உலு திராம், நவ. 27-

மஇகாவின் 80 ஆண்டுகால அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், கட்சியின் எதிர்காலத் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் கிளை அளவிலிருந்தே சிறந்த தலைவர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஜொகூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கட்சியின் அடித்தளமாக விளங்கும் கிளைகள் வலுவாக இருந்தால்தான் தேசிய அளவில் கட்சியைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்றார்.

மஇகாவின் 50 மற்றும் 60ஆம் ஆண்டு நிறைவு விழாக்கள் துன் சாமிவேலு தலைமையிலும், 70ஆம் ஆண்டு விழா டான்ஸ்ரீ சுப்பிரமணியம் தலைமையிலும் கொண்டாடப்பட்டன. தற்போது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய நிகழ்ச்சியில் தனக்குச் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பை வழங்கிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவப் பண்புகளையும் அணுகுமுறைகளையும் மற்ற தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மஇகா ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது. சுபாங் விமான நிலையம், நாடாளுமன்றக் கட்டடம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) உள்ளிட்ட நாட்டின் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களில் மஇகா தலைவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்றார்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவப் பண்புகளும் செயல்பாடுகளும் தேசிய அளவில் மட்டுமின்றி, கட்சியின் கிளை அளவிலும் பின்பற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் கட்சியை வழிநடத்தவிருக்கும் தலைவர்கள் சரியான பாதையில் பயணிப்பதுடன், அடிமட்டத்திலிருந்து திறமையான தலைவர்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்ட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்திற்கான வலுவான தலைமைத்துவத்தை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கட்சியின் கிளைகள் பலவீனமடைந்தால் ஒட்டுமொத்தக் கட்சியும் பலவீனமடைந்து வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். தேசிய அளவில் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பது மட்டும் போதாது; அந்த ஒற்றுமை ஒவ்வொரு கிளையிலும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேசிய அளவில் ஒற்றுமையாக இருப்பதாகக் கூறிக்கொண்டு, கிளை அளவில் பிளவுபட்டுச் செயல்பட்டால் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யமாக இருந்தாலும் அது அழிந்துவிடும் என்பதைத் தலைவர்கள் உணர வேண்டும் என்றார்.

இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் கட்சி 80 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து பயணிப்பது சாதாரணமான சாதனையல்ல. எனவே, மஇகாவின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதுடன், எதிர்காலத் தலைமுறையினரிடம் கட்சியின் பொறுப்புகளை ஒப்படைக்கும் வகையில் புதிய தலைவர்களை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த டத்தோ டி.முருகையா மற்றும் அவரது குழுவினருக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles