

கோலாலம்பூர்,
ஜூலை 11-
ஓம்ஸ் அறவாரியம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல்
துறை ஆதரவோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்று நடத்தும்
செம்மொழியான தமிழ் மொழியின் 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
வரும் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு இந்த மாநாட்டை மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மனித வள அமைச்சரும் மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ. சிவகுமார் தெரிவித்தார்.
புதிய வரலாறு எழுதப் போகும் இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள்,பார்வையாளர்கள் உட்பட 3,000 பேர் கலந்து கொள்கிறார்கள்.
இதில் வெளிநாடுகளில் இருந்து மட்டும் 700 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.
இதற்கு முன்னர் மூன்று முறை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசிய ஏற்று நடத்தியது.
இப்போது நான்காவது முறையாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசிய ஏற்று நடத்துவது பெருமையளிக்கிறது என்று இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இதனிடையே
தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் உதயநிதி உட்பட நான்கு அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று மாநாட்டின் நிர்வாக தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன்,தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மாநாட்டின் இணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம் சரவணன், பிரதமரின் இந்தியர் சிறப்பு அதிகாரி சண்முகம், inபேராசிரியர் டான்ஸ்ரீ மாரிமுத்து, முனைவர் இராஜேந்திரன், முனைவர் மணிமாறன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

