
புத்ரா ஜெயா ஜூலை 13-
மலேசியாவில் நடைபெறும் 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மிகப் பெரிய அளவில் வெற்றியடைய முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்று மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவரும் மனிதவள அமைச்சருமான வ. சிவகுமார் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் ஜூலை 21 முதல் 23 வரை உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது.
நீண்ட நெடிய வரலாறு மற்றும் வளமான இலக்கியம் கொண்ட பழமையான மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ்மொழி எதிர்நோக்கும் சவால்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இதற்கு முன்னர் 1966, 1987 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசிய ஏற்று நடத்தியுள்ளது.
இப்போது 4 ஆவது முறையாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், OMS அறக்கட்டளையுடன் இணைந்து மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்துகிறது.
இந்த மாநாட்டை மாபெரும் அளவில் வெற்றியடைய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பா, ஹாங்காங், மொரிஷியஸ், சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சுமார் 700 பேராளர்கள் உள்ளடக்கிய 3,000க்கும் மேற்பட்ட அறிஞர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது பெருமையளிக்கிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்படுகிறது.
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மாநாட்டை நடத்துவதற்கு பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேலும் இந்த மாநாட்டின் தலைவராக என்னையும் இணைத் தலைவராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணனும்
இணைந்து ஒருங்கிணைத்து மாநாட்டை சுமூகமாக நடத்த ஒப்புக் கொண்டிருக்கிறார் .
மாநாடு மற்றும் அனைத்து தொடர்புடைய கட்சிகள் மீது ஒரு உள்ளடக்கிய தாக்கத்தை ஏற்படுத்த Malaysia Madani கொள்கை ஒப்புக் கொள்கிறது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் சிறப்பு அம்சமாக ஜூலை 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பை வழங்கியிருக்கும் பிரதமருக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநாட்டை வெற்றியடையச் செய்ய ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் என்ற முறையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

