
புத்ரா ஜெயா ஜூலை 13-
மலேசியாவில் நடைபெறும் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பங்கு பெறும் இந்த நிகழ்வானது தமிழர்களின் ஒற்றுமை பறைசாற்றும் என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ. சிவகுமார் தெரிவித்தார்.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு தமிழூற்றின் தளமாக இந்த மாநாடு அமையும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார் அவர்
இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரியும் தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழியை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதில் உள்ள சவால்கள் பற்றி விவாதிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் மிகப்பெரிய அளவில் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது.
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் இருந்து 3,000 பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் இந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்று அவர் சொன்னார்.

