
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 11 –
நாடே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு மொத்தம் 14,000 வாக்குகள் கிடைத்தன.
பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் 10,131 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.
சுயேட்சை வேட்பாளருக்கு 188 வாக்குகளும் பிஎம்ஆர் வேட்பாளருக்கு 152 வாக்குகளும் கிடைத்தன.இவர்கள் இருவரும் வாய்ப்புத் தொகையை இழந்தனர்.
இறுதியில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவ் 3,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் லீ கீ ஹோங் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை பெரும்பான்மை சற்று குறைந்துள்ளது.
நடப்பு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹோங் காலமானதை தொடர்ந்து கோலகுபு பாருவில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
கடந்த இரண்டு வாரங்களாக பிரச்சாரம் அனல் பறந்தது.
வெற்றி பெறப் போவது யார் என்ற பரபரப்பும் உச்சத்தை தொட்டது.
அஞ்சல் வாக்குகளில் முதல் முறையாக பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றுள்ளது.
இது ஒரு புதிய வரலாறாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு கோலகுபு பாரு மக்கள் வழங்கிய வெற்றி பரிசாக இந்த தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக பல குறை கூறல்கள் முன்வைக்கப்பட்டாலும் இந்த இடைத்தேர்தல் முடிவு அனைத்தையும் முறியடித்து விட்டது என்று அவர் சொன்னார்.

