
செ.வே.முத்தமிழ்மன்னன்
பத்துகாஜா, மே.18: இங்குள்ள டேசா செங்காட். ( இந்தியன் செட்டில்மெண்ட்) பகுதியில் கடந்த 30 வருடங்களாக பழைய கட்டத்தில் பாலர் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பழைய கட்டடம் பிரச்சனைக்கு மாற்று வழியாக இங்குள்ள மக்கள் பயன்படுத்தும் மண்டபத்தின் அருகாமையில் பாலர்பள்ளி அமைக்க முன்னாள் மனிதவள அமைச்சரும் ,பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ.சிவகுமார் 95 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார் என்று கிராம பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் ரகுநாதன் அவுளி கூறினார்.
இந்த பாலர்பள்ளி அரசாங்க ஆதரவில் இயங்கினாலும், எங்கள் கிராமத்து இயக்கத்தின் பார்வையில் செயல்பட்டு வருகிறது.
தற்போது இடம் பற்றாக்குறையால் 25 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
இந்த புதிய பாலர்பள்ளி கட்டுமானப்பணிகள் முற்றுப்பெற்றவுடன், அடுத்தாண்டு முதல் 40 மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் இங்கே இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இப்பகுதியில் சுமார் 30 அல்லது 40 ஆயிரம் வரை எண்ணிக்கையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு குறிப்பாக அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள், மலாய்காரர்கள், சீக்கியர்கள் மற்றும் சீனர்கள் வசித்து வருகின்றனர்.
ஆகையால், இங்கு 5 முதல் 6 வயது கொண்ட மாணவர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆனால், இடம் பற்றாக்குறை பிரச்சனையால் அவர்கள் மற்ற பாலர்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைப்பாடு உருவாகி வருவதாக அவர் வருத்தமாக கூறினார்.
இந்த 95 ஆயிரம் ரிங்கிட் மானியம் எங்களுக்கு போதவில்லை காரணம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான மேசை நாற்காலிகள் மற்றும் பள்ளி தளவாடங்கள் வாங்க வேண்டிய சூழலில் இருந்து வருகிறோம்.
ஆகவே, நன்கொடையாளர்கள் மற்றும் நல்லுள்ளங்கள், வணிகர்கள் எங்களுக்கு உதவமாறு அவர் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
இவ்வேளையில் இந்த புதிய பாலர்பள்ளி நிர்மாணிப்பிற்கு மானியம் வழங்கி உதவிய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமாருக்கு எங்கள் கிராம மக்கள் மற்றும் இயக்கத்தின் சார்பில் அ.ரகுநாதன் நன்றியைத்
தெரிவித்துக் கொண்டார்.

