
தமிழ்ப் பள்ளியில் படித்துத் தேர்ச்சிப் பெற்று, இடைநிலைப்பள்ளியில் பயிலும் 50 ஏழை மாணவர்களுக்கு மொத்தம் ரி.ம.24,000 நிதி உதவி வழங்க தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் முன்வந்துள்ளது.
நான்காம் படிவத்தில் தேர்ச்சிப் பெற்று இந்த ஆண்டில் எஸ்.பி.எம். தேர்வு எழுதவிருக்கும் 30 மாணவர்களுக்கு ரி.ம.400, எஸ்.பி.எம். தேர்ச்சிப் பெற்று இந்த ஆண்டில் எஸ்.டி.பி.எம். சேரும் 20 மாணவர்களுக்கு தலா ரி.ம.600 வழங்கப்படும்.
இந்த உதவி நிதிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தமிழ்ப்பள்ளியில் படித்துத் தேர்ச்சிப் பெற்று இடைநிலைப் பள்ளிக்குச் சென்றவராக இருக்கவேண்டும்.
மேலும், எஸ்.பி.எம்/ எஸ்.டி.பி.எம். தேர்வில் தமிழ் மொழியை அல்லது தமிழ் இலக்கியத்தை ஒரு தேர்வுப்பாடமாக எடுப்பவராக இருக்கவேண்டும் என்று தமிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி அறவாரியத்தின் தலைவர் திரு.வே.விவேகானந்தன் ஒர் அறிக்கையில் கூறினார்.
மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தங்கள் பெயர், அடையாளக்கார்டு எண், ஆகியவற்றை (அடையாளக் கார்டில் உள்ளபடி மலாய் மொழியில்) எழுதவேண்டும். வீட்டு முகவரி, தற்போது படிக்கும் இடைநிலைப் பள்ளியின் முகவரியையும் எழுதவேண்டும்.
தாங்கள் தமிழ்ப் பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழின் நகலையும், தற்போது தமிழ் மொழி/ தமிழ் இலக்கியத்தை ஒரு தேர்வுப் பாடமாக எடுப்பதை உறுதிப்படுத்தும் தமிழ்மொழி ஆசிரியரின் உறுதிக்கடிதத்தையும்( பள்ளி முத்திரையுடன்) இணைத்து அனுப்பவேண்டும்.
இந்த ஆண்டில் எஸ்.பி.எம். எடுக்கும் மாணவர்கள் தங்களின் மூன்றாம் படிவ தேர்வு முடிவுகளின் நகலையும் எஸ்.டி.பி.எம். சேரும் மாணவர்கள் தங்களின் எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளின் நகலையும், தங்கள் பெற்றோர்களின் மொத்த மாத வருமானத்தின் சான்றையும் இணைத்து அனுப்பவேண்டும்.
மாணவர்கள் தங்கள் விண்ணப்பக் கடிதங்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
tamilschoolCAF@gmail.com
தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான உதவிநிதியை அவர்களின் பெயரில் எழுதப்பட்ட காசோலையாக அவர்களின் வீட்டு முகவரிக்கு ஆகஸ்ட் 30 ந் தேதிக்குள் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று திரு. விவேகானந்தன் மேலும் கூறினார்.
இடைநிலைப்பள்ளி தமிழ் மாணவர்களுக்கு 1992இல் ரி.ம.30,000, 1989 -இல் 14,500 இந்நிதிவாரியம் வழங்கியுள்ளது என்று அவர் நினைவுகூர்ந்தார்.

