
ஜோகூர் பாரு, ஜூன் 8- கூலாயில் பெண் ஒருவர் கடந்த மாதம் கடத்தப்பட்டச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தகவல்கள் மற்றும் உளவு நடவடிக்கையின் வாயிலாக ஜோகூர் மாநில மற்றும் புக்கிட் அமான் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று ஜோகூர், நெகிரி செம்பிலான், மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில கடந்த மே மாதம் 23 முதல் 25 வரை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு 24 முதல் 48 வயது வரையிலான அந்த ஒன்பது சந்தேகப் பேர்வழி களையும் கைது செய்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் கூறினார்.
அந்தப் பெண்ணை மீட்பதற்கு பிணைப்பணமாக வழங்கப்பட்டதாக நம்பப்படும் கணிசமானத் தொகையையும் போலீசார் மீட்டதாக அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவியல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் ஆறு பேர் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது தெரிய வந்தது என்றார் அவர்.

