
காஜாங் ஜூன் 18-
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக (BRIEF-i) பேங்க ராக்யாட் 5 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ இரமணன் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவர்களின் வர்த்தக விரிவாக்கம், மூலத்தன செலவுகளுக்கு உதவும் நோக்கில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை மிகவும் வரவேற்கிறேன் என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
இந்திய தொழில் முனைவர்கள் பயன்பெறும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் மற்றொரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த முழு ஆதரவு வழங்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திட்டத்தின் வாயிலாக தொழில்முனைவர்கள் வணிகத்தைத் தொடரவும், நிறுவனங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
இருப்பினும் பேங்க் ராக்யாட் நிதியை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும் நடைமுறை எளிதாக்கப்பட வேண்டும்.
பேங்க் ராக்யாட் நிதியை பெறுவதற்கு நிபந்தனைகள் கடுமையாக இருந்தால் இந்த நிதியை பெறுவதற்கு இந்தியர் சிறுதொழில் வணிகர்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவார்கள்.
ஆகவே இதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவருமான டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.

