
புத்ராஜெயா, ஜூன் 20 – ஒற்றைச் சாளர ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்கான சிறந்த வியூகங்களைக் கண்டறிவதற்காகக் கூட்டுப் பணிக்குழுவை நிறுவ மலேசியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
தேசிய ஒற்றை சாளர (என்.எஸ் டபள்யூ.) திட்டத்தின் கீழ் நிதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.
இந்த ஒற்றைச் சாளர ஒத்துழைப்பு எல்லை தாண்டிய வர்த்தக அனுமதியின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
வர்த்தக ஒழுங்குமுறை செயல்பாடுகளை இலக்கவியல் மயமாக்குதல், தேவையற்ற ஆவணங்களை நீக்குதல் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் வர்த்தகப் பங்களிப்பாளர்களிடையே தடையற்ற மற்றும் துல்லியமான தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதல் ஆகிய நடைமுறைகள் மூலம் இது அடையப்படும் என்று அவர் சொன்னார்.

