
ரவுப், ஜூன் 21-
ரவுப் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற செந்தமிழ் விழா போட்டிகளில் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் வாகை சூடி அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர்.
இத்தமிழ்ப்பள்ளியை பிரதிநிதித்து மொத்தம் 6 மாணவர்கள் கலந்து கொண்டனர்; எல்லாப் பிரிவுகளிலும் பரிசுகளை வென்றனர்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட பவித்ரா சுதாகர் இரண்டாம் நிலையில் வென்றார். திருக்குறள் மனனப் போட்டியில் பங்கேற்ற ஜனனி சுதாகர் இரண்டாம் பரிசை வென்று, மாநில அளவில் நடைபெறவிருக்கும் செந்தமிழ் விழாவிற்கு தேர்வாகி, சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பேச்சுப் போட்டியில் புனிதமலர் ஜெயசீலன் மூன்றாம் நிலையில் வென்றார். கவிதை போட்டியில் வேதாஶ்ரீ காளிதாசன் மூன்றாம் பரிசை வென்ற நிலையில், லாவண்யா மணி நான்காம் நிலைக்கு தேர்வானார். திருக்குறள் போட்டியில் பிரபு சரவணன் மூன்றாம் நிலை பரிசை வென்றார்.
கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை தமிழ்மொழி பாடக்குழு தலைவர் ஆசிரியை சு.சுபியம்மா தலைமையிலும், இப்பள்ளியின் தமிழ்மொழி பாட ஆசிரியர்களின் துணையுடனும் மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் இல.கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களைச் சிறப்பாக தயார்படுத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும், சிறப்பான நடனத்தை வழங்கிய பள்ளி மாணவர்களுக்கும் அவர்களைச் சிறப்பாக தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் அவர் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.
போட்டி நடைபெற்ற ரவுப் தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து செலவிற்கு பணம் கொடுத்த பெ.ஆ.சங்கத்திற்கும், மாணவர்களைச் சிரமம் பாராமல் அழைத்துச் சென்ற பெ.ஆ.சங்கத் துணைத் தலைவர் காளிதாசன், ஆசிரியை கா.தேவராணி, ஆசிரியை குமாரி சு.கீர்த்தனா ஆகியோருக்கும் தலைமையாசிரியர் நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில், வெற்றிப் பெற்ற சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்த பெ.ஆ.ச தலைவர் ஐ.சண்முகநாதன் தனது சார்பில் அனைவரையும் சிறப்பு செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.

