
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் 52 பேர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் ஒவ்வொரு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணிகளில் ஈடுபட்டு சட்டத்துக்கு புறம்பான வகையில் மது, போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கலெக்டர் பிரதீப் குமார், எஸ்பி வருண்குமார் மற்றும் போலீஸ் படையினர் நேற்று இரவு பச்சைமலை நெசக்குளம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் ஊறல் போடுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் குழிதோண்டி புதைத்தனர்.

