
கோலாலம்பூர், ஜூன் 29
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) இலக்காகக் கொண்ட பேங்க் ராக்யாட் இந்தியர் தொழில்முனைவோர் நிதியளிப்பு-i (BRIEF-i) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RM50 மில்லியன் ஒதுக்கீடு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுவதாகத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.
இத்திட்டம் ஜூன் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து 10 சதவீத நிதி தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
“ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில், நாங்கள் இந்த RM50 மில்லியனை முடித்துவிடுவோம். ஏனெனில், 15 நாட்களில், நாங்கள் ஏற்கனவே 10 சதவீதத் தொகையை அடைந்துவிட்டோம்,” அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேங்க் ராக்யாட் உடன் இணைந்து, நிதியுதவிக்காக 43 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு மொத்தம் RM3.8 மில்லியன் ஆகும். மேலும் RM 5.7 மில்லியன் பெறுமானமுள்ள 135 விண்ணப்பங்கள் அடுத்த கட்ட செயலுக்கு வரவுள்ளது.
“இந்தியர் தொழில்முனைவோர் தங்கள் வணிக இலக்குகளை அடைய உதவுவதில் அரசாங்கம் மற்றும் பேங்க் ரக்யாட் போன்ற நிதி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறினார்.

