


செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் ஜூன் 30-
வீடமைப்பு மேம்பாட்டாளரின் சாலை விரிவாக்கத்திற்கு வழிவிடும் வகையில் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் கைவைக்க விட மாட்டோம் என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
சீனப் பள்ளி அல்லது தேசியப் பள்ளியாக இருந்தால் நிலத்தில் கை வைப்பார்களா என்றார் அவர்.
பள்ளியின் மிக அருகிலேயே வீடுகளைக் கட்ட மேம்பாட்டாளருக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று பெரும் கேள்விக் குறியாக உள்ளது.
திட்டமிடல் மற்றும் கட்டிட அனுமதியின் ஒப்புதலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கின்ராரா தோட்டத் தமிழ்ப்பள்ளி இருப்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் தற்போது 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்
உண்மை அப்படி இருக்கையில் ஒரு பொறுப்புள்ள DBKL அந்த மேம்பாட்டாளரின் வீட்டுடைமைத் திட்டத்தை நிராகரித்திருக்க வேண்டாமா? என்றார் அவர்.
அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை.
இன்று வரை தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமிழ்ப் பள்ளியின் சில பகுதிகள் இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து வாயே திறக்கவில்லை.
இது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
இன்று கின்ராரா தமிழ்ப்பள்ளி முன் பேராசிரியர் டாக்டர் இராமசாமி தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல், தமிழச்சி காமாட்சி, டாக்டர் ஸ்ரீராம், இராஜரத்தினம், முன்னாள் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மலேசிய தமிழர் குரல் தலைவர் சரவணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

