

ஈப்போ,ஜூலை01: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 49வது ஆண்டுப் போதுக்கூட்டத்தில் மூத்த எழுத்தாளர் ஒருவருக்கு வாழ்நாள் தமிழ்ச் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட நிலையில் மேலும் இருவருக்கு இளம் எழுத்தாளர் விருதும் வழங்கப்பட்டது.
அவ்வகையில்,பேரா மாநிலத்தில் நீண்டக்காலமாய் தமிழ் எழுத்துலகில் தனித்துவமாய் பயணித்து வரும் எழுத்தாளர் தனலெட்சுமி ஜெகநாதனுக்கு வாழ்நாள் தமிழ்ச் சாதனையாளர் விருது வழங்கி பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அவரது இத்தனை ஆண்டுக்கால எழுத்துப்பணிக்கு அங்கீகாரம் வழங்கி பெருமிதப்படுத்தியது.
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது முதல் அச்சங்கத்தில் உறுப்பினராகி,அதில் பல்வேறு பொறுப்புகளும் வகித்த இவர் நடப்பு நிர்வாகத்தில் செயலவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.இச்சங்கம் தோற்றம் கண்டபோது அதில் கலந்து கொண்ட இரு பெண்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தக்காலங்களில் இவரது எழுத்துப்பணி என்பது தனித்துவமாய் விளங்கியுள்ள நிலையில் வானொலி,பத்திரிக்கைகளிலும் இவரது எழுத்து பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.போட்டிகளிலும் இவரது எழுத்து முதன்மை பரிசுகளையும் பெற்றுள்ளது என்பது பெருமிதமனாது.தன் வாழ்நாளில் பெரும் பகுதியை எழுத்துப்பணியில் பயணம் மேற்கொண்டுள்ள இவருக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வாழ்நாள் தமிழ்ச் சாதனையாளர் விருது வழங்கியிருப்பது நனிச் சிறந்த ஒன்றுயென அச்சங்கத்தின் தலைவர் ந.கு.முல்லைச் செல்வன் தெரிவித்தார்.
அதுபோல் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் மலேசியத் தமிழ் எழுத்து சூழல் ஆரோக்கியமாகவும் சிறந்த இலக்கை நோக்கி பயணிக்கவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இளம் எழுத்தாளார் விருதை சங்கம் வழங்கி வருவதாக கூறிய அவர் அவ்விருதுகள் நம் நாட்டின் எழுத்துலக ஜாம்பவான்களில் இருவரான தமிழ்க்குயிலார் கலியபெருமாள் மற்றும் தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் ஆகியோரின் பெயரில் வழங்கப்படுவதாகவும் கூறினார்.
அவ்வகையில்,இளம் எழுத்தாளரான கலைமதி இரமேஷ்க்கு சங்கத்தின் முதல் தலைவருமான தமிழ்க்குயிலார் கலியபெருமாள் விருது வழங்கப்பட்ட நிலையில் எழுத்தாளர் லோகேந்தினி சுப்பிரமணியத்திற்கு தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.விருது பெற்ற இவ்விருவரும் ஆசிரியர்களாக தங்களின் பணியை தொடர்ந்திருக்கும் நிலையில் மலேசியா உட்பட அனைத்துலக நிலையிலும் தங்களின் படைப்புகளுக்காக பரிசுகளை பெற்றுள்ளனர்.
அதேவேளையில்,மலேசியாவின் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு சரணாலயமாக திகழும் இயல் மன்றத்தின் பொறுப்பாளர்களாகவும் இருந்துள்ளனர்.நாட்டில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ள இவர்களின் படைப்புகள் உள்ளூர் வெளியூர் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மூவருக்கும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் சிறப்பித்து விருதுகளை வழங்கிய வேளையில் சங்கத்தின் உறுப்பினர்களோடு அதன் புரவலர் வழக்கறிஞர் அ.மு.சு.விவேகனந்தன் உட்பட சங்கத்தின் மேனாள் தலைவர் முனைவர் மோகன் குமார் அவர்களும் உடன் இருந்தார்.

