மெஸ்ஸி உலக சாதனை! 18 கோல்களை அடித்து வரலாறு படைத்தார்

டல்லாஸ்: ஜூன் 23-
உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் ‘குரூப் – ஜே’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, இரண்டு கோல்களை அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் மொத்தம் 18 கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் மிகக் கடுமையான பலப்பரீட்சையில் ஈடுபட்டன. ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை எடுத்த கேப்டன் லியோனல் மெஸ்ஸி, எதிர்பாராத விதமாக கோலாக மாற்றத் தவறினார்.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.இருப்பினும், ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் மெடினா கொடுத்த பாஸை மிகத் துல்லியமாகப் பெற்று, ஆஸ்திரியா கோல்கீப்பரை ஏமாற்றி பந்தை வலைக்குள் தள்ளினார் மெஸ்ஸி.

இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது 17ஆவது கோலைப் பதிவு செய்து, ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (16 கோல்கள்) சாதனையை முறியடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாறு படைத்தார்.

முதல் பாதியில், அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் (90+5 நிமிடம்), பந்தை கொண்டு சென்ற மெஸ்ஸி, அங்கிருந்த 4 ஆஸ்திரிய வீரர்களை ஏமாற்றி கோல் அடித்து அசத்தினார். முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என வென்றது. தொடர்ந்து இரு வெற்றி பெற்ற அர்ஜென்டினா, 6 புள்ளியுடன் ‘ரவுண்டு-16’ சுற்றுக்கு முன்னேறியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles