
கோலாலம்பூர், ஆக 7-
ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் (SMC), இனம், மதம், சமூகப் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து மலேசியர்களுக்கும் தரமான கல்வியை சமமாக வழங்குவதை அரசு தொடர்ந்து தேசிய முன்னுரிமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அதன் இயக்குநர் சுரேன் கந்தா கூறுகையில், கல்வி என்பது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மிக முக்கியமான முதலீடு என்றும், ஒவ்வொரு மலேசியக் குழந்தைக்கும் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்த சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கல்வி அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பயன் தனிநபர்களுக்கு மட்டுமல்ல, முன்னேற்றமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் போட்டித்திறன் மிக்க மலேசியாவை உருவாக்குவதற்கும் அடித்தளமாக அமையும் என்றார்.
நான் அதிகம் கேட்கவில்லை. ஒரு விஷயத்தை மட்டுமே கேட்கிறேன் – இனம், மதம், மொழி பாராமல் அனைத்து மலேசியர்களுக்கும் சமமான கல்வி உரிமையை வழங்குங்கள்.
குழந்தைகளின் கல்வியை நாம் பாதுகாக்கும்போது, மலேசியாவின் எதிர்காலத்தையே நாம் கட்டியெழுப்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
எந்த ஒரு இனத்திற்கோ சமூகத்திற்கோ மட்டுமல்ல; அது ஒவ்வொரு மலேசியரின் அடிப்படை உரிமை. தேர்தல் காலங்களில் மட்டுமே கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அது நாட்டின் நிரந்தர வளர்ச்சியில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

