மலேசியா – சிங்கப்பூர் இடையே தொழிலாளர் துறை ஒத்துழைப்பு வலுப்படும்: கிக் தொழிலாளர்கள் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம்! – டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர், ஆக.8-
மாறிவரும் தற்கால வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப, மலேசியாவும் சிங்கப்பூரும் தொழிலாளர் துறையிலான தங்களின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என்றும், குறிப்பாக கிக் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இணைந்து செயல்படும் என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பணி விஜயம் மேற்கொண்ட அவர், அந்நாட்டின் மனிதவள இடைக்கால அமைச்சர் ஜாஸ்மின் லாவ் உடன் நடத்திய சந்திப்பில் இவ்விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தொழிலாளர் சந்தையின் தற்போதைய வளர்ச்சிப் போக்குகள் குறித்தும், எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப இரு நாடுகளின் மனிதவளத்தை எவ்வாறு தயார்படுத்துவது என்பதில் நிலவும் சவால்கள் குறித்தும் இச்சந்திப்பின் போது இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.

“மலேசியாவும் சிங்கப்பூரும் வேலைவாய்ப்புத் துறையில் அதிவேக மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. எனவே, புதுவித பணி முறைகளுக்கும் பொருளாதாரத் தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் நமது தொழிலாளர் கொள்கைகளும், அவர்களுக்கான பாதுகாப்பும் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்,” என்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் ரமணன் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வருகைக்கும் ஏற்ப தொழிலாளர்களைத் தகவமைத்துக் கொள்ளச் செய்வது, திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சிகளை வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் நலனில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், ஒரு முற்போக்கான மற்றும் அனைவருக்கும் ஏற்ற பணிச்சூழலை உருவாக்க இரு நாடுகளும் தங்களின் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வது மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே இயல்பாகவே ஒரு நெருங்கிய தொழிலாளர் பிணைப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், திறமை மற்றும் திறன் மேம்பாட்டில் இரு நாடுகளும் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய இது பெருமளவில் உதவும் என்றார்.

“மலேசிய – சிங்கப்பூர் உறவு என்பது வெறும் இரு அண்டை நாடுகளுக்கிடையிலான தொடர்போடு முடிந்துவிடுவதில்லை. தொழிலாளர் நடமாட்டம், பொருளாதாரத் தொடர்பு, மக்களிடையிலான பந்தம் என பல வழிகளில் நமது பிணைப்பு ஆழமானது. அதனால்தான், கூட்டுறவை வலுப்படுத்தவும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், எதிர்கால மனிதவள சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும் நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

இச்சந்திப்பில் சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் திட்டமிடல் மற்றும் நிதித் திட்டத் துறை இயக்குநர் பூங் வான் சிங், வேலைவாய்ப்புத் தரம் மற்றும் சமத்துவப் பணிச்சூழல் துறை இயக்குநர் கன் சு யி, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ முகமையின் (SSG) கார்ப்பரேட் திட்டமிடல் பிரிவு இயக்குநர் கெவின் லீ, மற்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் உத்தி மற்றும் மனிதவளச் சூழல் மேம்பாட்டுத் துணை இயக்குநர் லாக் ஹாங் குவான் ஆகியோரும் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்கு முன்னதாக, அமைச்சர் ரமணன் சிங்கப்பூரில் உள்ள கிராப் நிறுவனத்தின் தலைமையகத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles