
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரின் பின்புலம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன
ட்ரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவர் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் பகுதியைச் சோ்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்பது விசாரணையில் தெரியவந்தது
முதல் சுற்றில் 3 குண்டுகள், 2-வது சுற்றில் 5 குண்டுகள் என மொத்தம் 8 குண்டுகள் பாய்ந்துள்ளன. இதில் ஒரு குண்டு மட்டும் ட்ரம்ப்பின் வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி சென்றுள்ளது.
க்ரூக்ஸின் தந்தை குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பள்ளியிலே மிகவும் அமைதியான மாணவராக மேத்யூஸ் க்ரூஸ் இருந்துள்ளார். மேத்யூஸ் க்ரூக்ஸ் 2022-ம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு நர்சிங் பயிற்சியை முடித்த அவர், வீடுகளுக்கே சென்று நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் நபராகவும் பணியாற்றி வந்துள்ளார். க்ரூக்ஸ் மிகவும் புத்திசாலி, வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனத் தெரிகிறது.
கணினி தொடர்பான பணிகளில் ஈடுபடுவது, கேம் விளையாடுவதில்தான் இவருக்கு ஆர்வம் இருந்ததாக அவரின் தோழர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் எதற்காக ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது வீட்டில் முழுமையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முழு விசாரணைக்கு பிறகு தகவல்களை வெளியிடுவோம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

