

சுங்கை,ஜூலை19: தமிழ்ப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.விளையாட்டுப் போட்டி மற்றும் பள்ளியின் பரிசளிப்பு மட்டுமே அதன் செயல்பாடாக இருக்கக்கூடாது.
மாறாக,மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மாணவர்களின் மேம்பாட்டிற்கும் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கை ஆகியவற்றின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் திறன்பட அது இயங்க வேண்டும் என மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்திய நலப்பிரிவுக்குமான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் ஆலோசனை வழங்கினார்.
அதேவேளையில்,ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உறவுப்பாலமாக திகழும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெற்றோர்களுக்கும் உகர்ந்த நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக மாணவர்களுக்கு தன்னாளுமை முகாம்,கட்டொழுங்கு முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போல் பெற்றோர்களுக்கும் இன்றைய கல்வி முறை உட்பட மாணவர்களின் கல்வி பயணம்,அவர்களை நெறிப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை பெற்றோர் ஆசிரியர் சங்கம் முன்னெடுக்க முன் வரவேண்டும் என்றார்.
மேலும்,மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் என்னும் வகையில் தாம் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் தனி கவனம் செலுத்தி வருவதாக கூறிய அவர் மானியம் கோரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இனி பள்ளிக்கூடத்திற்கான ஓராண்டு நிகழ்ச்சி திட்டமிடலை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஓராண்டில் மேற்கொள்ளப்போகும் திட்டமிடலோடு இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு தன்னை அணுகுமாறு ஆலோசனை கூறிய சிவநேசன் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடு,அதன் திட்டமிடல்,ஆக்கப்பூர்வப் பணி ஆகியவை கணக்கிலடப்பட்டே அப்பள்ளிகளுக்கு தேவையான உதவிகளும் மானியங்களும் இனி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
முன்னதாக சுங்கை தமிழ்ப்பள்ளியின் ஓராண்டு நடவடிக்கை திட்டமிடலை பார்வையிட்ட பின்னர் அப்பள்ளிக்கு வெ.20 ஆயிரமும் கிளாப்பா பாலி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வெ.2ஆயிரமும் மானியமாக வழங்கிய பின்னர் அவர் இந்த ஆலோசனையை முன்வைத்தார்.
மேலும்,பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் செயல்பாட்டையும் அதன் நடவடிக்கைகளையும் தொடர்ந்து தாம் கண்காணித்து வருவதாகவும் பள்ளிகளின் தேவைகளையும் அதன் மேம்பாட்டையும் மாநில அரசாங்கத்தின் வாயிலாக நிறைவான பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நினைவுக்கூர்ந்த அவர் பள்ளிகளின் வளர்ச்சியில் ஆசிரியர்களோடு பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பெற்றோர்களும் கைகோர்த்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தத்தம் பள்ளிகளுக்கு மானியம் வழங்கிய மாண்புமிகு அ.சிவநேசனுக்கு நன்றியை தெரிவித்த தலைமையாசிரியர்களான திரு.தியாரன் மற்றும் திரு.மாயாண்டி ஆகியோர் முன்னதாக பத்தாங் பாடாங் தலைமையாசிரியர் மன்றத்திற்கும் இதற்கு முன்னர் வெ.10 ஆயிரம் வழங்கியதையும் நினைவுக்கூர்ந்து நன்றி கூறும் விதமாய் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

