
மாலிம் நாவார்,ஆக16: நாம் அனைவரும் மலேசியர்கள்.நாம்மிடையே மேலோங்கியிருக்கும் பங்சா மலேசியா சிந்தனை பல்லினம் வாழும் இப்பெருமை மிகு நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மேலோங்க செய்வதோடு நாட்டின் பெருமிதமாகவும் அஃது அமையும் என மாலின் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி ஷாஷா வலியுறுத்தினார்.
மாலிம் நாவார் சட்டமன்ற சேவை மையத்தின் ஆதரவோடு கோமஸ் ( KOMAS ) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பங்சா மலேசியா பட்டறையில் தொடக்கி வைத்து பேசுகையில் அவர் இதனை நினைவுறுத்தினார்.
இம்மாதிரியான உணர்வியல் சார்ந்த சிந்தனைக்கு வித்திடும் பட்டறைகளும் கலந்துரையாடல்களும் காலத்திற்கு உகர்ந்த ஒன்று என்பதை சுட்டிக்காண்பித்த சட்டமன்ற உறுப்பினர் மலேசியர்களிடையே ஒற்றுமையையும் தேசப்பற்றையும் விதைக்க இது முக்கிய வழிகோலாய் அமையும் என்றார்.
அதேவேளையில்,பல்லினத்தின் கலை,பண்பாடு,பாரம்பரியத்தோடு ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் மேலோங்க செய்யவும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் அடித்தலமாய் அமையும் என்பதில் ஐயமில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மலேசியர்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் தனித்து சிறப்பை பெற்றிருபதை எண்ணி ஒவ்வொரு மலேசியரும் பெருமைப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர் இளம் தலைமுறையினர் நாட்டை நேசிக்கவும் இதுநாள் வரை கட்டிக்காக்கப்பட்ட ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பேணி காத்திடவும் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் நல்லுறவையும் சீர்குலைக்கும் வகையில் பரப்பப்படும் கருத்துகளையும் அவதூறுகளையும் மலேசியர்கள் புற்க்கணிக்க வேண்டும்.அவ்வாறு செய்யும் பொறுப்பற்றவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பல்லினம் வாழும் இந்நாட்டு நமது பெருமைமிகு நாடு.இந்நாட்டின் தனித்து அடையாளங்களும் சிறப்பும் வேறு எங்கும் நம்மால் காண முடியாது என்றார்.
மலேசியர்களிடையே நாட்டுப் பற்றையும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் விதைக்கும் இம்மாதிரியான பட்டறைகளும் கருத்தரங்குகளும் இந்த சுதந்திர மாதத்தில் நாடெங்கும் ஏற்பாடு செய்தல் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மிகவும் சிறப்பான முறையில் பங்சா மலேசியா என்னும் உணர்வை மேலோங்க வைத்த இந்நிகழ்ச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

