ரவாங், சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு உலு சிலாங்கூர் இந்திய கவுன்சிலர்கள் தொலைக்காட்சி அன்பளிப்பு!

உலு சிலாங்கூர், செப். 4 – ரவாங், சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தைச் சேர்ந்த எட்டு இந்திய உறுப்பினர்கள் விவேக தொலைக்காட்சியை அன்பளிப்பாக வழங்கினர்.

பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று சுமார் 4,000 வெள்ளி மதிப்புள்ள இந்த தொலைக்காட்சியை அவர்கள் பள்ளி தலைமையாசிரியர் திருமதி ஜெயந்தி லிங்கப்பன் அவர்களிடம் நேற்று பள்ளியின் சபை கூடல் நிகழ்வின் போது ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வில் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் இந்திய பிரதிநிதிகளான ப.புவனேஸ்வரன், வீ.முருகன், பி.ராஜேஸ்ராவ், ஏ.துரை அன்பழகன்,எம். திலகேஸ்வரி, எஸ்.ஸ்ரீகாந்த், ஆர்.ராஜசேகரன், எஸ்.சின்னையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தங்கள் கோரிக்கையை ஏற்று தொலைக்காட்சியை பள்ளிக்கு வழங்கி உதவிய உலு சிலாங்கூர் இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயந்தி, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் பொது அறிவை வளர்ப்பதற்கும் உதவும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி பள்ளியின் சிற்றுண்டிச் சாலையில் வைக்கப்படும் என்று சொன்னார்.

இதனிடையே, சுங்கை சோ தமிழ்ப்பள்ளிக்கான இந்த தொலைக்காட்சி அன்பளிப்பு திட்டத்தை நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கான மானியத்தின் மூலம் தாங்கள் அமல்படுத்தியதாக நகராண்மைக் கழக உறுப்பினர் புவனேஸ்வரன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவித் திட்டங்களை எட்டு இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுத்துவதற்கும் தாங்கள் முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles