ஸ்ரீ முருகன் நிலையத்தின்‘கல்வி ஜெயம் ‘மாணவர்களின்சிறந்த எதிர்காலத்திற்கு வித்திடும்! -பத்து எம்பி பிரபாகரன்

மா பவளச்செல்வன்

கோலாலம்பூர், செப். 10-
மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் பெற்றோர்களையும் உட்படுத்தும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ‘கல்வி ஜெயம்’ ஓர் அற்புத திட்டம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் வருணித்தார்.

தங்கள் பிள்ளைகள் பாடங்களில் என்னென்ன சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் என்பதை அவர்கள் அருகே அமர்ந்து கொண்டு பெற்றோர்கள் கண்காணிக்கும்போது கண்டறியலாம். பின்னர் அவற்றிற்குத் தீர்வு காணும் வழிமுறைகளை எடுத்துரைக்கும்போது பிள்ளைகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் என்றார்.

“இந்த அணுகுமுறை வாயிலாக மாணவர்களை கல்வியில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் முயற்சி பாராட்டுக்குரியது” என்று இங்குள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில் இந்நிலையத்தின் ‘கல்வி ஜெயம்’ நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தங்கள் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு அதிகமான பெற்றோர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் பிரபாகரன்.

“சுரேன் கந்தா தலைமையிலான ஸ்ரீ முருகன் நிலைய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகத்தான ஒரு பணியை ஆற்றி வருகின்றனர்”என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, படிவம் 3 மாணவர்களுக்கான ‘காந்தி வாலிக்’திட்டத்தின் கீழ் கடந்த 12 வாரங்களில் சிறந்த தேர்ச்சி நிலையைப் பெற்ற 10 மாணவர்களுக்கு பிரபாகரன் பரிசுகளை வழங்கினார்.

மித்ரா வாயிலாக உயர் கல்வி மாணவர்கள் அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெறலாம் என்ற தகவலையும் வெளியிட்டார் மித்ரா தலைவருமான பிரபாகரன்.

இதனிடையே, பெற்றோர்களோடு இணைந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதே ‘கல்வி ஜெயம்’ நிகழ்ச்சி என்றும் இது 6ஆம் ஆண்டு மாணவர்களை இலக்காகக் கொண்டது என்றும் இந்நிலையத்தின் ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீ கணேஷ் குறிப்பிட்டார்.

அவ்வகையில் நேற்று தேசிய மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு பாடங்களுக்கான வழிகாட்டி நடைபெற்றதாகவும் இதில் மாணவர்களோடு பெற்றோர்களும் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பாடத் திட்டம், மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் உட்பட பல விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா ஆற்றிய உரை மாணவர்களுக்கு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles