
கிள்ளான், செப். 20 – செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் சிலாங்கூர் சிறுவர்
நட்சத்திரம் பாடல் திறன் போட்டியை மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு
செய்துள்ளது.
சுமார் 15,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பரிசுகளை
வெல்வதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இப்போட்டியின் இறுதிச் சுற்று
புக்கிட் ஜாலில் அரங்கில் வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி
நடைபெறவுள்ளது.
பத்து போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த இறுதிச் சுற்று நிகழ்வில்
சிறப்பு பிரமுகராக கலந்து கொள்ள மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செந்தோசா தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்..
இப்போட்டியில் கலந்து
கொள்ள இதுவரை 60 பேர் பதிவு செய்துள்ளதாகக்
கூறிய அவர், இப்போட்டிக்கு சிலாங்கூரிலிருந்து மட்டுமின்றி வெளி
மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வதால்
பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை 170 பேரை எட்டும் எனத் தாங்கள்
எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
இளையோர் மத்தியில் மறைந்துள்ள கலைத் திறனை வெளிப்படுத்துவதையும் அவர்களுக்கு தன்னக்கையையும் தைரியத்தையும் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இப்போட்டியை நாங்கள் நடத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
தமிழ் கலைஞர்கள் மன்றம், கிள்ளான் விண்வெளி கலை மன்றம், சிலாங்கூர் பாரம்பரிய இசை வாத்திய சங்கம் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த போட்டியில் முதல் பரிசாக 2,000 வெள்ளியும் இரண்டாம் பரிசாக 1,500 வெள்ளியும் மூன்றாம் பரிசாக 1,000 வெள்ளியும் ஆறுதல் பரிசாக 500 வெள்ளியும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

