
கோலாலம்பூர், அக்.3-:
மலேசியத் தமிழ்க் கல்வி வரலாற்றில் பேராக், சுங்கை சிப்புட் நாடாளும்னற தொகுதியில் தொடக்க விழா காணவிருக்கும் ஹீவூட் தமிழ்ப் பள்ளிக்கு ஒரு நெடிய வரலாறு உண்டு.
டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராக இருந்தபொழுது, 5.9 ஹெக்டேர் நிலப்பரப்பில் 2017-ஆம் ஆண்டில் அதிவேகமாக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கான கட்டுமானப் பணிகள், அதற்கடுத்த ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, துரிதமாக நடைபெற்ற கட்டுமானப் பணிகள் நிலைகுத்தி நின்றன.
மஇகா முன்னெடுப்பில், குறிப்பாக அந்தத் தொகுதியில் கடந்த இரண்டு முறை களம் கண்டவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன், ஹீவூட் தோட்டத்தில் வாழ்கின்ற இந்தியப் பாட்டாளி குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் தமிழ்க் கல்வியை கருதி, அன்றைய தேசிய முன்னணி அரசாங்கத்தில் வைத்த அழுத்தமான கோரிக்கையின் விளைவாக இப்பள்ளிக்கான ஒப்புதல் கிடைத்தது.
சுதந்திர மலேசியாவில் நஜீப் தலைமையிலான அரசுதான் 7 புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கு உரிமத்துடன் ஒப்புதல் அளித்தது. நாட்டின் 530-ஆவது தமிழ்ப் பள்ளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஹீவூட் தமிழ்ப்பள்ளி, 21-ஆம் நூற்றாண்டின் புதிய சூழலுக்கு ஏற்ப நவீன கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.
பரந்த விளையாட்டுத் திடல், நூலகம், அறிவியல் ஆய்வகம், சிற்றுண்டியகம், நவீன கழிப்பறைகள், இசை அரங்கம், கலைக் கல்விக்கூடம், ஓய்வெடுக்கும் பகுதி உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ்ப் பள்ளியை ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்த வாரத்தில், அக்டோபர் 6-ஆம் நாள் தொடக்கிவைக்க இருப்பதை அறிந்து, மஇகா அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
குறிப்பாக, இந்தப் பள்ளியின் கட்டுமானத்தை அங்குல அங்குலமாக பார்த்துப் பார்த்து கண்காணித்தும் அவதானித்தும் வந்தவர் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்று அவரின் ஊடகச் செயலருமான சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், மஇகா திட்டமிட்ட புதிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான ஹீவூட் தமிழ்ப்பள்ளி, தொடக்க விழா காண்பது, மலேசியத் தமிழ்க் கல்வி மறுமலர்ச்சிக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிவசுப்பிரமணியம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

