
புதுடெல்லி: நவ 18-.
நீண்ட தூரம் பறந்து சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இது வரலாற்று தருணம் என அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக வழக்கமான வெடிபொருள்கள், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
மேலும் கடல் மட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில்(அதாவது மாக் 5 சுமார் 1,200கிமீ தூரம்) பறக்கும் திறன் கொண்டவை.
ஆனால் மேம்பட்ட திறன் கொண்ட சில ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் 15 மாக் வேகத்தில் கூட பறக்கும் திறன் பெற்றவை.
தற்போது சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளன.
அமெரிக்கா ஒரு லட்சிய திட்டத்தின்கீழ் இதுபோன்ற ஆயுதங்களின் வரம்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை நேற்று ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

