
புதுடெல்லி: டிச 6-
சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரட்டை செயற்கைக்கோள் நேற்று பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஓர் அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது.
இந்த இரு செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி ப்ரோபா-3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து நேற்று அளவில் விண்ணில் ஏவப்பட்டது.
சூரிய ஒளி வட்டத்தை ஆய்வு செய்யும் ‘புரோபா-3’: ப்ரோபா-3 இரட்டை செயற்கைக்கோள் புவியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
அங்கிருந்தபடியே 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

