தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: டிச 18-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆப் செஸ் என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நேற்று நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:

18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷை, ‘நம்முடைய குகேஷை’ பாராட்டுகிறேன்.

சீன நாட்டை சேர்ந்த சாம்பியனை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார் குகேஷ்.

புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்முடைய பையன், சென்னை பையன், அதனால்தான் இன்றைக்கு குகேஷை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.

குகேஷ் உலக செஸ் சாம்பியன் ஆனதை பாராட்டும் வகையில், அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி பரிசு அறிவித்திருக்கிறோம்.

இந்த மேடையில் அதை வழங்கி இருக்கிறோம்.

2001ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியனாக இங்கிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் பரிசு பெற்றார்.

அவரைப் பாராட்டும் வகையில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் இதேபோன்ற ஒரு பாராட்டு விழாவை சென்னையில் நடத்தினார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி நகரில், ஆனந்த்துக்கு வீடு வழங்கிப் பாராட்டினார் முதல்வர் கலைஞர்.

2007ம் ஆண்டு 2ஆவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் வென்றபோது, ரூ.25 லட்சம் நிதி வழங்கி பாராட்டினார் முதல்வர் கலைஞர்.

விஸ்வநாதன் ஆனந்த் 2 முறை உலக சாம்பியன் பட்டங்கள் பெற்றபோதும் சரி – இப்போது குகேஷ் உலக சாம்பியன் ஆகும் போதும் சரி, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, பாராட்டி பெருமைப்படுத்தும் வாய்ப்பு திமுக அரசுக்கு கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles