நீர்த் தேக்கச் சுவர் இடிந்த சம்பவம் – குடியிருப்பாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க மேம்பாட்டாளர் தயார்

அம்பாங் ஜெயா, ஜன 3- கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியிருப்பு டகுதிக்கு அடுத்துள்ள நீர்த்தேக்க குளத்தின் சுவர் இடிந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சௌஜானா உத்தாமா, தாமான் ஸ்ரீ ஆலம், குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர் முன்வந்துள்ளார்.

உரிய இழப்பீடு விகிதம் குறித்து விவாதிக்க மேம்பாட்டாளர் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த விவகாரத்தை ஒருங்கிணைப்பதில் பாயா ஜெராஸ் சட்டமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் குடியிருப்பாளர்களுக்கு உதவுவார். இது தவிர மந்திரி புசார் கழகம் (எம்பிஐ) வாயிலாகவும் பண உதவி வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

இன்று இங்கு, ஏஹ்சான் மார்ட் பல்நோக்கு கடையின் பாண்டான் இண்டா கிளையை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேம்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் இழப்பீட்டு விகிதம் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் அளவைப் பொறுத்து அமையும் என்றார் அவர்.

மேம்பாட்டாளர் நிவாரணத் தொகையை வழங்கத் தயாராக இருக்கிறார். ஆனால் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தொகையின் விகிதம் ஒரே மாதிரியாக இருக்காது. இதன் தொடர்பான கணக்கெடுப்பு தொகுதி ஒருங்கிணைப்பாளரால் செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles