உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் அயலகத் தமிழர் தினம்!!

காளிதாஸ் சுப்ரமணியம்

சென்னை,ஜன11:

தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் அயலகத் தமிழர் தினம் மிக விமரிசையாக நந்தம்பாக்கம்,சென்னை வர்த்தக மையத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கியது.

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வில் தனித்துவ அக்கறையும் செயல்பாடும் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தனது தலைமையில் அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை உருவாக்கி அதன் வாயிலாக தமிழ்நாடுக்கும் அயலகத் தமிழர்களுக்குமான உறவையும் பிணைக்கும் ஓர் அம்சமாக இத்தினம் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி திங்கள் 11-12ஆம் தேதிகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று தொடக்கி வைத்தார்.

உலகெங்கும் தமிழர்கள் பரவிக்கிடந்தாலும் அவர்களுக்கான வேரும் மூலமும் தமிழ்நாடுதான் என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக இந்நாள் கொண்டாடப்படுகிறது எனலாம்.

இம்மாநாடுக்கு மலேசியாவிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் எழுத்தாளர்கள், பொது இயக்கம் சார்ந்தவர்களோடு அரசியல் பிரமுகர்களும் அடங்குவர்.

மலேசியாவை பிரதிநிதி பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், ம இ காவின் தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் பிரதான விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அதேவேளையில்,பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வு பிரிவு ஆட்சிகுழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் தலைமையில் மாலிம் நாவார்,புந்தோங் மற்றும் உத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர்களோடு மாநில பொது இயக்கத்தினர்களும் பேராளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ, ஜொகூர் மாநில சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுவனேஸ்வரன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.இராஜேந்திரன், கவுன்சிலர் புவனேஸ்வரன், கவுன்சிலரும் எழுத்தாளருமான சிவா லெனின் உட்பட மலேசியாவைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

உலகெங்கும் இருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் இந்த மாபெரும் மாநாட்டில் மகுடம் சூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles