காரில் இருந்த கட்சிக் கொடிக்கும் ஈசிஆர் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை- காவல்துறை விளக்கம்

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் சிலர் காரில் துரத்திச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளைஞர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு கார்களில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஈசிஆர் வழக்கு தொடர்பாக பள்ளிக்கரணை காவல் ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து கார்த்திகேயன் பேசியதாவது:- ஈசிஆர் வழக்கில் இதுவரை 4 பேர் கைதாகி இருக்கும் நிலையில், 3 பேரை பிடிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் இருந்த கட்சிக் கொடிக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. காரினை ஓட்டிய ஓட்டுநர் தான் கட்சிக்கொடியை பயன்படுத்தியுள்ளார்.

பார்க்கிங் மற்றும் சுங்கத்துறை கட்டணத்தில் இருந்து தப்பிக்கவும் கட்சிக் கொடியை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

7 இளைஞர்களில் 5 பேர் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். ஒரு இளைஞர் வெளி மாநிலத்திலும், மற்றொருவர் படித்து முடித்து வேலை செய்தும் வருகிறார்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள சந்துரு என்பவர் மீது 2 குற்ற வழக்குகள் இருக்கிறது. இந்த சம்பவத்தை பொறுத்தவரை கொள்ளையடிக்கும் முயற்சியும் நடக்கவில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த பின்னர் உடனடியாக சிஎஸ்ஆர் காபி கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை கிடையாது. அதேபோல் புகார் அளித்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles