
ஜோர்ஜ் டவுன், பிப் 2- தேங்காய் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தைப்பூசம் நெருங்கி வரும் வேளையில் தாம் பல ஆயிரம் வெள்ளி இழப்பை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பினாங்கு மாநிலத்திலுள் தேங்காய் விநியோகிப்பாளர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோ, பந்தாய் ரெமிஸ் மற்றும் கோல பெர்ணமில் தாம் குத்தகைக்கு எடுத்த மூன்று தோட்டங்களில் தேங்காய் உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பி.சரஸ்வதி (வயது 66) கூறினார்.
கடந்த ஆண்டுகளில் தைப்பூசத்திற்கு 80,000 முதல் 100,000 வரையிலான தேங்காய்களை என்னால் விநியோகிக்க இயலும். ஆனால், இவ்வாண்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை என்னால் நிறைவேற்ற இயலவில்லை.
இதன் காரணமாக இவ்வாண்டு நான் எந்த ஆர்டரையும் எடுக்கவில்லை. நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்பட நிறைய பேர் என்னைத் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தேங்காய்கள் வேண்டும் என்கின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை நான் நிராகரித்து விட்டேன் என்று லோரோங் அபு சித்தியில் உள்ள தனது வர்த்தக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறினார்.
தன் கணவரான ஏ,அன்பரசனுடன் (வயது 1) இணைந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன் தேங்காய் விற்பனையை ஆரம்பித்த தமக்கு இத்தகைய சவால் ஏற்பட்டது இதுவே முதன் முறையாகும் என்றும் சரஸ்வதி தெரிவித்தார்.

