

கோலாலம்பூர் பிப் 23-
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் அடிப்படை நோக்கமானது தமிழ்மொழி மற்றும் தமிழரின் உயர்வுக்கு சேவையாற்றுவதாகும்.
தமிழரும் தமிழ் மொழியும் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
குறிப்பாக தமிழுக்கும் தமிழருக்கும் எந்த ஒரு இடத்திலும் பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு எதிராக குரல் கொடுத்து தடுத்து நிறுத்துவோம் என்று மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் மணிச்செல்வன் முருகன் மணியம் தெரிவித்தார்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் 54ஆவது தேசியப் பேராளர் மாநாடு இன்று கோலாலம்பூர் ஜாலான் பெலாமி IKP Bellamy மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை மலேசிய இளைஞர் பேரவையின் தலைவர் முகாமட் இஸாத் அபிஃபி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் மணிச்செல்வன் முருகன் மணியம் 54 ஆம் ஆண்டுக்கான மாநாட்டு மலரில்
தமிழ் இளைஞர்களின் தலைமைத்துவ மேலாண்மைக்காக மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து பல முகாமைத்துவத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றார்.
மேலும் , கல்வி, பண்பாடு, சமூக மேம்பாடு மற்றும் தலைமைத்துவம் போன்ற துறைகளில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக முகாமையான திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.
இந்த மாநாட்டில் பணிமன்றத்தின் முன்னாள் தலைவர் மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம்.கிருஷ்ணன், மணிவேல் கு.முரளி, கெப்போங் மூத்த மணிமன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ் மலர் ஆசிரியர் கு.தேவேந்திரன், தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோர் உட்பட அனைத்து மாநில மணிமன்ற பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதனிடையே தேசிய அளவில் சிறந்த மணிமன்றமாக தேர்வு செய்யப்பட்ட மலாக்கா மாநில மணிமன்றத்திற்கு 3,000 வெள்ளி மற்றும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

