மகனால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூதாட்டியின் உடல் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்பு

இங்குள்ள ஜாலான் தோக் கெலிங்கில்  மனநலம் பாதிக்கப்பட்ட  மகனால் கொல்லப்பட்டதாக நம்பப்படும் மூதாட்டி தீக்காயங்களுடன்  இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் மகன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது தொடர்பில்   தங்கள் துறைக்கு காலை 7.48 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சித்தி நோர் சலாவதி சாட் கூறினார்.

இச்சம்பவத்திற்கு முன்னர், 43 வயதான சந்தேக நபருக்கும் 68 வயதுடைய அந்த மூதாட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அங்கிருந்த சந்தேக நபரின் 14 வயது மகன் பார்த்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

சாட்சியின் வாக்குமூலத்தின்படி  இச்சம்பவம் காலை 7.00 மணி முதல் 7.30 மணிக்குள் நிகழ்ந்துள்ளது. தனது தந்தைக்கும் (சந்தேக நபர்) பாட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையும் அதனைத் தொடர்ந்து பாட்டி உதவி கோரி அலறுவதையும் அச்சிறுவன் கேட்டுள்ளார் என அவர் சொன்னார்.

உடனே அச்சிறுவன்  அண்டை வீட்டுக்காரரிடம் உதவி கேட்க வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். என்ன நடக்கிறது என்பதை அறிய  அண்டை வீட்டார் முயன்றனர். ஆனால் சந்தேக நபரின் அச்சுறுத்தல் காரணமாக அவராகள் மேல் நடவடிக்கைக்காக் காவல்துறையைத் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர்  அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

சந்தேக நபர் வீட்டின் முன் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர்,   பாதிக்கப்பட்டவர் எரியூட்டப்பட்ட நிலையில் கிடப்பது தொடக்கககட்டச்  சோதனையில் கண்டறியப்பட்டது என்றார்.

சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்ட  மாற்றுத் திறனாளி அட்டை வைத்திருப்பது ஆரம்பகட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள சுல்தானா பஹியா மருத்துவமனை தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்  தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles