
பூச்சோங், ஏப் 1-
எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு தலா 5,000 வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதேசமயம் பாதிக்கப்பட்ட இதர வீட்டின் உரிமையாளர்களுக்கு தலா 2,500 வெள்ளி வழங்கப்படும்.
சிலாங்கூர் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸில் உள்ள எரிவாயு குழாய் தீ விபத்து இடத்தில் உள்ள அனைத்து பணியாளர்களின் விவகாரங்களும், மீட்பு நிறுவனங்கள் உட்பட, எளிதாக்கப்பட வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உதவிகளையும் வீடுகளை பழுது பார்க்கும் பணிகளையும் வழங்குமாறு மத்திய அரசு மாநில அரசு, பெட்ரோனஸ் நிறுவனத்தையும் அவர் கேட்டுக் கொண்டார்.
தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வருகை புரிந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிலவரங்களை நேரில் பார்வையிட்டார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில துணை போலிஸ் தலைவர் முகமட் ஜைனி அபு ஹாசன், இந்த சம்பவத்தில் இதுவரை மொத்தம் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 49 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 112 பேரில், 63 பேர் தீக்காயங்கள், சுவாசப் பிரச்சினைகள், காயங்கள் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக சைபர்ஜெயா, செர்டாங் , புத்ராஜெயா மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றார்.

