தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும் – மந்திரி புசார்!

சுபாங் ஜெயா, ஏப். 2 – சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸில் நேற்று  எரிவாயு குழாயில் ஏற்பட்ட  தீ விபத்து சம்பவம் குறித்த முதல் கட்ட அறிக்கை 72 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக   மந்திரி புசார் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் வெளிவரும்  அனைத்து தகவல்களையும் புறக்கணிக்காமல் காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் முழுமையான விசாரணையை மேற்கொள்வார்கள் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் நிறைய தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.  நாங்கள் அதை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் அதனை காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையிடம் தெரிவிக்கலாம்.  இதன் மூலம் முழுமையான விசாரணை மேற்கொள்ள முடியும் என அவர் சொன்னார்.

நாங்கள் எந்த சாத்தியத்தையும் மறுக்கவில்லை. ஆனால் யூகங்களை வெளியிட வேண்டாம். இந்த சம்பவம் தொடர்பில் மேம்பாட்டாளர்கள், ஊராட்சி மன்ற  அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விசாரிக்கப்படுவார்கள் என அவர் உறுதியளித்தார்.

காவல்துறையினர் முழுமையான விசாரணை நடத்தட்டும்… சம்பவத்திற்கான காரணம்  72 மணி நேரத்திற்குள்  கண்டறியப்படும் சாத்தியம் உள்ளது. தங்கள்  பொறுப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இப்போதைக்கு  ‘பணிக்குழு’வை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலின்  பல்நோக்கு மண்டபத்தில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  இதனைத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 78 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக அவர் விளக்கினார்.

முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாதிக்கப்பட அந்தப் பகுதியைப் பார்வையிட்டார்.  ​​தீயினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தலா 5,000 வெள்ளியும்  ஒரு பகுதி சேதமடைந்த 100க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தலா 2,500 வெள்ளியும்  வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles