

மலேசிய மற்றும் சிங்கை தமிழினத்தின் விடிவெள்ளி, தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் உருவாக அடித்தளமாக விளங்கியவர். தன்னையே மொழிக்கும் இனத்திற்கும் ஈகப்படுத்திக் கொண்ட வரலாற்று நாயகர் கோ.சா என்று செல்லமாக அழைக்கப்படும் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி பிறந்தநாள் இன்று.
மலேசியத் திருநாட்டில் ‘மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை’ எனும் மிகப்பெரிய கனவோடு இயக்கத்தைத் தோற்றுவித்து எங்களுக்கெல்லாம் நிழல் தரும் மரமாக மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவொரு ஐயமும் இன்றி கூறலாம். அவர் தோற்றுவித்த மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தற்போதைய தேசியத் தலைவராக இருப்பதிலும் ஐயா தமிழவேள் அவர்களின் பிறந்தநாளன்று நினைவுக்கூறுவதிலும் பெருமையும் மகிழ்ச்சியும் உடனே பொறுப்பும் கொள்கிறேன் என்று மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத்தலைவர் மணிச்செல்வன் முருகன் மணியம் தெரிவித்தார்.
ஐயா தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903ல் பிறந்து தமது 21ஆம் வயதில் 1924ல் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரிலும் பின்னர் மலாயாவிலும் தமிழர்களிடையே ‘தமிழர் திருநாள்’ எனும் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டவர். அப்போதைய மலாயா சிங்கப்பூரில் பல வகையிலும் தமிழ்த் தொண்டாற்றினார்.
மலேசியாவில் வாழ்ந்த தமிழர்கள் குடியுரிமை பெற்றவர்களாக வாழவும், தாய்மொழியாம் தமிழோடு தமிழ்க் கலை இலக்கியத்தைப் போற்றி வளர்த்தெடுக்கவும் வேண்டி பல்லாற்றானும் பாடாற்றிய ஒண்டமிழ் பேராசான். பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சியின்போது மலாயா இரப்பர் தோட்டங்களில் தொழிலாளிகளாக இருந்த தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு மனம் பொறுக்காமல் கொதித்தெழுத்து தமிழர் சீர்திருத்த சங்கத்தின்வழி போராடியவர்.
1934-இல் தமிழ் முரசு எனும் செய்தி இதழை வாரந்தோறும் வெளியிட்டார். இப்பத்திரிகை மக்களிடம் அதிக செல்வாக்குப் பெறவே 1935-ல் நாள்தோறும் இதழாக விரிவடைந்தது. தமிழ் முரசு இதழில் பெரியாரின் கொள்கைகளையும் தமிழ் சீர்திருத்த சங்கத்தின் முற்போக்கான இலட்சியங்களையும் சாதி ஒழிப்பையும் எழுதி வந்தார்.
மலாயாவிலும் சிங்கையிலும் தமிழியச் சிந்தனைகள் பரவுவதற்கும் தமிழர் விழுமியங்கள் நிலைபெறவும் ஓயாது உழைத்து வெற்றி கண்டவர். மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டவராகவும், தமிழர் நலமொன்றையே மேலாகக் கருதியவராகவும் திகழந்தார் என்பதற்கு தமிழ் முரசு இதழே மிகப்பெரிய எடுத்துக்காட்டு.மக்களின் எழுச்சிக்காவும் விழிப்புணர்வுக்காகவும் தமிழ் முரசு வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார்.
மேலும், பல சிக்கல்கள் எதிர்கொண்டும் அதனை சீர்மையாக கையாண்டும் தமிழகத்திலிருந்து மிகச் சிறந்த அறிஞர்களையும் சான்றோர்களையும் தலைவர்களையும் அழைத்துவந்து நாடுதழுவிய நிலையில் தமிழர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி மாபெரும் தமிழ் எழுச்சியைத் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தினார். அவ்வருகையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955-ல் கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ. சாரங்கபாணி அவர்களுக்குத் “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார்.
மலாயாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்மொழிக் கல்வி நிலைப்பதற்கு மிக உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியவர் அமரர் கோ. சாரங்கபாணி என்பது பதிவுசெய்யப்பட்ட வரலாறு. மலாயாவில் முதன் முதலாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது அதில் சமற்கிருத மொழியைப் பாட மொழியாக வைக்கவேண்டும் என பேராசிரியர் நீலகண்ட சாசுத்திரி பரிந்துரை செய்தார். ஆனால், அமரர் கோ.சா இந்தப் பரிந்துரையை மிகத் தீவிரமாக எதிர்த்தார்.
பல்கலைக்கழகத்தில் தமிழையே பாட மொழியாக வைக்கவேண்டும் என்று போராடினார். பல்கலைக்கழகத்தில் தமிழை இடம்பெறச் செய்வதற்காக ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற நிதித்திட்டத்தைத் தொடங்கி நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து பணத்தைத் திரட்டி தமிழைக் காப்பாற்றிய பெருமகனார் இவராவார். இவருடைய அயராத உழைப்பின் பயனாகவும் தமிழ்மக்கள் ஒன்றுதிரண்டு வழங்கிய ஆதரவினாலும் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழை முதல் மொழியாகக் கொண்ட இந்திய ஆய்வியல் துறை அமைந்தது.
மலேசியாவில் பொங்கல் நன்னாளைத் தமிழர் திருநாளாக கொண்டாட வேண்டும் என்ற உயரிய தெளிவையும் தொலைநோக்க எண்ணத்தையும் மனத்தில் வைத்தே உருவாக்கினார். தமிழர் திருநாள், மொழி, இனம் சார்ந்த திருநாள் அது தை முதல் நாளான பொங்கல் நாளாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணி தமிழர்களிடையே மாபெரும் தமிழ் அறிவையும் தமிழ் உணர்வையும் தமிழின எழுச்சியையும் ஏற்படுத்தினார் என்பது இந்தக்காலக்கட்டத்தில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
எத்தணை சிக்கல்கள் வந்தாலும் இந்தப் பதிவினை யாராலும் அழிக்க இயலாது. மொழி, இனத்திற்கும் சமயத்திற்கும் வேறுபாடு அறிந்து தெளிந்த பகுத்தறிவோடு செயல்பட்டார் என்பது வரலாற்று உண்மை. இந்நாட்டில் தமிழும் தமிழரும் தங்களின் தாய்மொழி உரிமையோடு வாழ்வதற்கு மிகவும் தொன்றாட்டி இருக்கிறார் தமிழவேள் கோ.சாரங்கபாணி எனும் தமிழினத்தின் பேரெழுச்சியோன். மலேசியத் திருநாட்டில் கடைசி தமிழ் மக்கள் இருக்கும் வரை தமிழவேள் கோ.சாரங்கபாணி வாழ்வார், அவரின் சேவைகளைப் போற்றி பாதுக்காக்க வேண்டியது ஒவ்வொரு மலேசியத் தமிழர்களின் கடமை என்று தெரிவித்தார் திரு முருகன் மணியம்.