




சுங்கை பூலோ, ஜூன் 13-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் சுங்கை ரெங்கம், தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் 22ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி இன்று சுங்கை பூலோவில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்வாண்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 65 அணிகளும் பெண்கள் பிரிவில் 34 அணிகளும் களமிறங்கியுள்ளன.
ஆக மொத்தத்தில் 90 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்ற இப்பள்ளிக்கு நமச்சிவாயம் கிண்ணமும் 2 ஆயிரம் ரிங்கிட் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
பத்துகேவ்ஸ், சுங்கை சோ, துவான் மி ஆகிய தமிழ்ப்பள்ளிகள் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றன.
பெண்கள் பிரிவில் தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் நிலையில் வெற்றி பெற்றன.
வெற்றி அவ்வணியினருக்கு ரவீந்திரன் சுழற்கிண்ணமும் 2 ஆயிரம் ரிங்கிட் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
காஜாங், ஹைலண்ட், ரிஞ்சிங், ஆகிய பள்ளிகள் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றன.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் தேசிய கால்பந்து வீரர் டத்தோ ஜைனால் அபிடின், இளம் தொழில் அதிபர் முரளி, மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகு ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

