
கோலாலம்பூர், ஜூன் 14-
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 38,953 பேர் வேலை இழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை (எஸ்.ஐ.பி.) தரவுகளின்படி, வேலை இழந்தவர்களில் 23,536 பேர் அல்லது 60.4 விழுக்காடு ஆண்கள் மற்றும் 15,417 பேர் அல்லது 39.6 விழுக்காடு பெண்கள் ஆவர்.
மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், உற்பத்தித் துறை, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், வாகன பழுதுபார்ப்பு, நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் ஆதரவு சேவைகள் போன்ற முக்கியப் பொருளாதாரத் துறைகளில் இந்த வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன.

நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப வணிகச் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.
நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் பதிவான வேலை இழப்புச் சம்பவங்களை மனித வள அமைச்சு (கெசுமா) மிகக் தீவிரமாகக் கவனித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் புதிய வேலைகளைத் தேடுவதற்கும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் தொழிலாளர் சந்தையின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு தலையீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கை வழி தெரிவித்தார்.
சவால்கள் இருந்தபோதிலும், மலேசியாவின் தொழிலாளர் சந்தை உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, நாட்டின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 17.33 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன், வேலையின்மை விகிதம் 3.0 விழுக்காடாகக் குறைந்த நிலையில் உள்ளது. அதேபோல், தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR) 70.9 விழுக்காடாக உள்ளது, இது நாட்டின் தொழிலாளர் சந்தை நிலையானதாகவும் மீள்திறன் கொண்டதாகவும் இருப்பதைக் காட்டுகிறது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு விரிவான ஆதரவை வழங்க மனித வள அமைச்சு மூன்று முக்கிய முன்னுரிமைகளைச் செயல்படுத்தி வருகிறது.

முதலாவதாக, MYFutureJobs மற்றும் Labour Market Exchange (LMX) போன்ற தளங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பொருத்தமான வேலைவாய்ப்புகளுடன் இணைத்தல் மற்றும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அவர்களின் தொழில் பாதையைத் திட்டமிடுதல் ஆகியவை முன்னெடுக்கப்படுகின்றன.
இரண்டாவதாக, மாறிவரும் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப, தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தவும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் பெர்கெசோ வாயிலாகப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மூன்றாவதாக, பாதிப்புக்குள்ளாகக்கூடிய துறைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு விரைவான தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர்களின் திறன்களைச் சீரமைப்பதிலும், தொழில் சந்தையின் தரவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்கள் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதிலும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து செயல்படுவதன் மூலம், நாட்டின் தொழிலாளர் சந்தையை மேலும் வலுப்படுத்த மனித வள அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

