


ஜொகூர் பாரு ஜூன் 14-
கடந்த 1983ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த பள்ளி நில எல்லை (Persempadanan Tanah) பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக நான் எஸ்.ஜே.கே.(தமிழ்) பண்டார் சிகாமாட் தமிழ்ப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டேன்.
இந்த நிலப்பிரச்சினை, பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக விளையாட்டு மைதானம் அமைக்க முன்மொழியப் பட்ட லோட் 8740 நிலத்தைச் சார்ந்ததாகும்.
குறிப்பாக, ஹாக்கி விளையாட்டில் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான பல சாதனைகளைப் படைத்துள்ள இந்தப் பள்ளிக்கு, சிறந்த விளையாட்டு வசதிகள் மிகவும் அவசியமானவை.
ஆய்வின் போது, ஜொகூர் மாநிலக் கல்வித் துறை (JPN), மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) மற்றும் மாவட்ட நில அலுவலகம் (PTD) ஆகியவற்றில் உள்ள நில எல்லை வரைபடங்கள், மலேசிய நில அளவை மற்றும் வரைபடத் துறை (JUPEM)-இன் MyLot செயலியில் காணப்படும் தகவல்களுடன் பொருந்தாதது கண்டறியப்பட்டது.
இந்த முரண்பாடே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நீடித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
இன்று நேரடிப்பார்வைக் குப் பின்னர், இவ்விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அடங்கிய முழுமையான கோப்பை, மலேசிய கல்வி அமைச்சர் மாண்புமிகு ஃபட்லினா சிடெக் அவர்களிடம் மேலாய்வு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக நான் ஒப்படைத்தேன்.
இந்த விவகாரத்தில் அக்கறையுடன் விரைவான நடவடிக்கை எடுத்த மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று, மிகவும் நெருக்கடியான அதிகாரப்பூர்வ பணிநிரலுக்கு மத்தியிலும், அவர் நேரடியாக எஸ்.ஜே.கே.(தமிழ்) பண்டார் சிகாமாட் பள்ளிக்கு வருகை தந்து, நிலத்தின் ஆரம்பகட்ட பயன்பாட்டு அனுமதிக் கடிதத்தை வழங்கினார்.
இது, 1983ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முக்கியமான முதல் படியாகும்.
இந்த அனுமதிக் கடிதம், பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG), பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நம்பிக்கைக்கு புதிய ஒளியைக் கொண்டு வந்துள்ளது.
மேலும், கல்வி மற்றும் நமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான விசயங்களில் மடானி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை யும் இது வெளிப்படுத்துகிறது.
இந்த முக்கிய முன்னேற்றத்தை நனவாக்க உதவிய மலேசிய கல்வி அமைச்சகம், ஜோகூர் மாநிலக் கல்வித் துறை, சிகாமாட் மாவட்டக் கல்வி அலுவலகம், பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG), சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் போராட்டம் வெறும் நிலத்தைப் பற்றியது மட்டுமல்ல. நமது பிள்ளைகள் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டு, உயர்ந்த சாதனைகளைப் பெற்று, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரும் முயற்சியாகும் என்று
டத்தோ ஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தபா
(செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர்) இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

