
கோலாலம்பூர் ஏப்ரல் 22-
Kuil Haram விவகாரம் தொடர்பாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மட்டுமே தனிப்பட்ட முறையில் கேள்விகளை எழுப்பி வருகிறார்.
ஆனால் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டிய இந்திய பிரதிநிதிகள் எங்கே போனார்கள் என்று மகிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்பு பேரவை தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் கேள்வியை எழுப்பினார்.
இந்து ஆலயங்களை குறிவைத்து ‘ஹராம்’ எனும் சொல்லைப் பயன்படுத்துவது, நாட்டின் சகிப்புத்தன்மை – மத நல்லிணக்கத்துக்கு எதிரானது.
தற்போது ஆலயங்கள் தொடர்பாக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ‘ஹராம்’ என்ற சொல், அந்த ஆன்மீகத் தலத்தின் மதத்தன்மையை இழிவுபடுத்துவதோடு, அது தொடர்பான பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் அமைகின்றது எ்று அவர் சொன்னார்.
தைப்பிங் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதிவு செய்யப்படாத ஒர் ஆலயம் குறித்து “கோவில் ஹராம்” என குறிப்பிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், அதனை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் சட்டரீதியில் முன்னெடுக்கப் படுமென கூறியுள்ளது.
கோவில் ஹராம் என்ற சொல்லுக்கு மாற்று சொல் இல்லையா?
“அந்த கோவில் உண்மையிலேயே அனுமதியில்லாமல் கட்டப்பட்டது உறுதிச் செய்யப்பட்டால், அதற்கேற்ப சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
அதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், ‘ஹராம்’ எனப்படும் அவமதிப்புச் சொல்லைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிராகரிக்கின்றோம்.
இது போன்ற விவகாரங்கள் எழும் போது ‘அனுமதியில்லாத கோவில்’ எனலாம், ‘பதிவுசெய்யப்படாத கோவில்’ எனலாம்.ஆனால் வெறுமனே ‘ஹராம்’ என்று கூறுவதால், அங்கு வரும் பக்தர்களை இழிவுப் படுத்தும் நடவடிக்கையாக இது அமைகின்றது என்று அவர் சாடினார்.
ஒற்றுமையோடு பல மதங்களை கொண்டிருக்கும் நம் நாட்டில் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர்கள் எந்த கருத்தையும் முன்வைக்காததது மேலும் இந்திய சமுதாயத்தை காயப்படுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் மட்டும் பேசி குரல் கொடுத்து வருபவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மட்டும் தான். மற்ற தமிழ் பிரதிநிதிகள் எங்கே? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

